Thursday 28 July 2016

சட்டமன்றத்தில் ஜீவா (சிங்கத்தின் கர்ஜனையும் குயிலின் கானமும்!)

தமிழகக் கம்யூனிச இயக்கத் தலைவர்களில் ஜீவா மிகவும் வித்தியாசமானவர். நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் – ஆகிய இரண்டிலும் ஒருங்கே கால் பதித்து, அவற்றை உள்வாங்கி, அவற்றினும் மேலெழுந்து மார்க்சியத்தின்பால் திரும்பியவர். கூடவே தமிழ் இலக்கியத்தைக் கற்றக் கரை தேர்ந்து, அதை அரசியல் மொழியாகப் பயன்படுத்தியவர். 1948-51 காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே அன்றைய சென்னை மாகாணத்திலும் கம்யூனிஸ்டு இயக்கம் கொடூரமான அடக்குமுறையைச் சந்தித்தது. புதிதாக அதிகார ருசியை அனுபவித்த காங்கிரஸ் தொழிலாளி வர்க்கத் தலைவர்களின் ரத்தத்தை ருசி பார்த்த அக்கிரமம் நடந்தது. இதற்குதானா சுதந்திரம் கேட்டார்கள்? என அதிர்ந்து போன மக்கள் 1952ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்கு ஒர் அடி கொடுத்தார்கள். சட்டமன்றத்தில் அந்தக் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆசை வார்த்தைகள் காட்டி உதிரிக் கட்சிகளை வளைத்துப் போட்டு ஆட்சி அமைத்தார் ராஜாஜி.
காங்கிரசுக்கு அடுத்து பெரிய கட்சியாக வெற்றி பெற்றிருந்தது கம்யூனிஸ்ட் கட்சியே. எதிர்க் கட்சித் தலைவராக பி. ராமமூர்த்தியும், துணைத் தலைவராக எம். கல்யாணசுந்தரமும் அவையில் வீற்றிருந்தனர். சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து ஜெயித்து அவைக்கு சென்றிருந்தார் ஜீவா. 1952 முதல் 1957 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1957, 1962 சட்டமன்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டாலும் வெற்றிப்பெற முடியவில்லை. 1963 இல் அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தார். ஆம். ஒரேயொரு முறைதான் ஜீவா எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
ஒருமுறையே ஆனாலும் திருமுறையே
ஒரு முறையே என்றாலும் அவரின் பேச்சு திருமுறையே எனலாம் – அதாவது, கம்யூனிச சிந்தனைகளை அழகுற எடுத்துரைத்த பாங்கு எனலாம். சிங்கத்தின் கர்ஜனைகளை மட்டுமல்ல, குயிலின் பாட்டையும் சட்டமன்றம் கேட்டது. அவரின் பேச்சுக்களில் ஆவேசமும் இருந்தது, இலக்கிய நயமும் வெளிப்பட்டது. மிகவும் நாசூக்கான நையாண்டியும் ஆங்காங்கே புகுந்து வந்தது.
சட்டப் பேரவையில் ஜீவா என்கிற தலைப்பில் அவரின் ஐந்தாண்டு பேச்சுக்களைத் தொகுத்து நூலாகத் தந்திருக்கிறார் கே. ஜீவபாரதி. அவற்றைப் படித்தே இந்த அனுபவத்தைப் பெற்றேன். கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் என்றால் பொருளாதார விஷயங்களையே பேசுவார்கள், அவற்றையும் கரடு முரடாகப் பேசுவார்கள் என்கிற தப்பான அபிப்பிராயம் ஆழமாகப் பரவியிருக்கிறது தமிழகத்தில். அவர்கள் எல்லாம் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும். தொகுக்கும் பணியை மட்டும் செய்துள்ள ஆசிரியர் எத்தகைய வியாக்கியானமும் செய்யவில்லை. ஜீவாவின் உரைகள் அவற்றின் சுயம் அழியாமல் அப்படியே நம் கண் முன்னால் நிற்கின்றன. ஒரு கம்யூனிஸ்ட்டு, வாழ்வின் சகல முகங்களையும் தரிசித்து வரும் காட்சியை இவற்றில் நாம் சந்திக்கலாம்.
மதுவிலக்கு பற்றி காபி கூட குடிக்காதவர்!
1952 ஜூலையில் மதுவிலக்கு பற்றிய விவாதம் சபையில் நடந்தது. மது அருந்தக் கூடாது என்று காந்திஜி கூறினார் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். ஜீவாவோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறியிருக்கிறார் என்றார். நஞ்சுண்பார்கள் உண்பவர் என்கிற குறளைக் கையாண்டார். அதே நேரத்தில், பிரச்சனையை தர்க்க ரீதியாகவும், நடைமுறை சார்ந்தும் அலசினார். பல நூற்றாண்டுகளாக இப்படி மதுவிலக்கு வற்புறுத்தப்பட்டும் ஏன் அதை ஒழிக்க முடியவில்லை என்கிற கேள்வியை எழுப்பினார். இவ்வளவு காலமாக முடியாதது ஒரு சட்டத்தால் மட்டும் முடிந்து விடுமா என்றார். முடியவில்லை என்பதற்கு அரசு தரப்பில் தரப்பட்டிருந்த புள்ளி விபரங்களைச் சுட்டிக் காட்டினார். மதுவிலக்கு சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடி வருவதை எடுத்துக் காட்டினார். இதற்கெல்லாம் உச்சமென ஒரு காட்சியை சித்தரித்தார். நோக்குங்கள் அதை – சமீபத்தில் 2-ந் தேதி தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு இரவு 1.30 மணிக்குப் போனேன். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியனாதன் அவர்கள் குடித்திருந்தார். ஹெட் கான்ஸ்டபிள் ஆதிகேசவனும் குடிபோதையில் உருண்டு கிடந்தார்
முதலாளித்துவக் கட்சிகளில் எம்.எல்.ஏ. என்றால் தேர்தலில் விட்ட பணத்தை மீண்டும் பிடிக்க, அதற்கு மேலும் சம்பாதிக்க இரவு பகலாகப் பாடுபடுகிறவர் என்று பொருளாகிப் போனது. ஆனால் கம்யூனிஸ்டு ஜீவா இரவு பகலாகப் பாடுபட்டார். நள்ளிரவில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து பார்த்தார் – வேலி வேலியாக இருக்கிறதா அல்லது அதுவே பயிரை மேய்கிறதா என்று கண்காணிக்க. மதுவிலக்குச் சட்டம் இருந்த காலத்தில் போலீஸ்காரர்களே மது அருந்தியிருந்தார்கள்! அதுவும் போலீஸ் ஸ்டேசனிலேயே! அதைவிடப் பாதுகாப்பான இடம் வேறு ஏது?
அவர்கள் மது அருந்தியிருந்தார்கள் என்பது ஜீவாவுக்கு எப்படித் தெரிந்தது? கேட்டால் அந்தப் போலீஸ்காரர்கள் சொல்லியிருப்பார்களா? சபையோருக்குச் சந்தேகம் வந்திருக்கும் என்று அடுத்துச் சொன்னார்.
கனம் ராஜாஜி அவர்கள் காபி குடிப்பார். நான் இன்றும் காபி கூட குடிப்பதில்லை. அதே மாதிரியாக போதை தரும் வஸ்துக்கள் எதையும் நான் தொடுவதில்லை. வெளியில் யாரிடம் என்னைப் பற்றிக் கேட்டாலும் தெரியும். போலீஸ் ஸ்டேசனுக்குள் நுழைந்த போது அன்று அவர்கள் குடித்திருந்ததினால் ஏற்பட்ட நாற்றம் என் குடலைப் பிடுங்கி எடுத்தது. அவர்கள் குடிபோதையில் மயங்கிக் கிடந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் பேச்சிலேயே தெரிந்தது.
ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு ஆனந்தம் மக்கள் சேவையில் கிடைக்குமே தவிர, போதை வஸ்துக்களால் அல்ல. தன்னளவில் மது அருந்தாத அந்தத் தலைவர், மதுவிலக்கை சட்டத்தால் நடைமுறைப்படுத்த முடியுமா என்கிற வாழ்வியல் நோக்கிலிருந்து பிரச்சனையை அலசினார். சட்டம் இல்லாத காலத்தில் ஊருக்கு ஒரு மதுக்கடை இருந்தது, இப்போதோ தெருவுக்கு ஒரு கடை – கள்ளச் சாராயக் கடை – வந்திருக்கிறது என்றார். புதுப்புது இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாகப் பொது ஜனங்கள் பேசிக் கொள்வதை நான் டிராமில் போகும் போதும் வரும் போதும் தினமும் கேட்கின்றேன் என்றார்.
அந்த காலத்தில் சென்னையில் டிராம் இருந்தது. அந்த வெகுஜன வாகனத்தில் தான் இந்த எம்.எல்.ஏ.வும் பயணம் செய்தார். மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதையும் காது கொடுத்துக் கேட்டார். இத்தகைய மெய்யான மக்கள் பிரநிதியாக ஜீவா வாழ்ந்திருக்கிறார் என்கிற செய்தியும் பக்கம் பக்கமாகக் கிடைத்து விடுகிறது.
தமிழ்நாடு உதயமாகும்:
1956 டிசம்பரில் அவர் பேசிய பேச்சும் இந்த நூலில் உள்ளது. இதுவே சபையில் அவர் பேசிய கடைசிப் பேச்சாக இருக்கக் கூடும். அது பட்ஜெட் மீது நடந்த பொது விவாதத்தில் அவர் பங்கேற்றது. அதன் ஆரம்பமே கிளர்ந்தெழுந்த தமிழ் உணர்வாய் உள்ளது- சென்ற கூட்டத்தில் தமிழில் அச்சேற்றிய வரவு செலவுத் திட்டம் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழிலேயே படிக்கப்பட்டது. இது குறிப்பிடத் தகுந்த ஒரு முன்னேற்றம். இது வரவேற்கத் தக்கதாகும். தமிழன் தனது வரவு செலவு திட்டத்தை அப்போது தான் தமிழில் போட்டிருக்கிறான். அது கண்டு குதித்துக் கும்மாளமிட்டது ஜீவாவின் உள்ளம்.
அடுத்த ஓரிரு மாதங்களில் வரவிருக்கிற தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் தமிழை சென்னை மாகாணத்தின் ஆட்சி மொழியாக்கினாலும் தமிழக பாட்டாளி மக்களுக்கு கிடைத்த வெற்றி இது என்று கொண்டாடி வரவேற்றது கம்யூனிஸ்ட் கட்சி. அதே நேரத்தில், நமது மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டுமென்றும் போராடியது கட்சி.
ஜீவா முழங்கினார்:-
இன்று தமிழ்மொழி ஆட்சி மொழியாகியிருப்பது உந்தித் தள்ளும் நம்மை, தமிழ்நாடு என்று திருப்பெயர் பெறுவதற்கு… வரப்போகும் சட்டசபையில் யார் என்ன நினைத்தாலும் சரி, நம் நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் நிச்சயமாக வரும்.
1957 தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி வெற்றி வாகை சூடியிருந்தால் அப்போதே தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைத்திருக்கும். வென்ற காங்கிரஸ் அதைச் செய்யவில்லை. அதைச் செய்யவும் ஒரு ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது. 1967ல் காங்கிரஸ் தோற்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகே இது நடந்தது. ஆனால், இதற்காக சட்டமன்றத்தில் அன்றே குரல் கொடுத்தவர் ஜீவா என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. சென்னைப் பல்கலைக்கழகம் என்கிற அழகான தமிழ்ப் பெயரைக் கூட மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்று ஆங்கிலத்தில் மாற்றப் பார்க்கிற ஆட்சியாளர்கள் இருக்கிற காலமிது. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று குரல் கொடுத்த இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். இந்த இரு பேச்சுக்களுக்கும் இடையே எத்தனையோ விசயங்கள் குறித்து முழங்கியிருக்கிறார் ஜீவா.
பிச்சைக்காரர்கள் பற்றி வள்ளுவர்
ராஜாஜி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது, பிச்சைக்காரர்கள் பெருகிப் போனார்கள். இது பற்றி சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது தலையிட்டு பேசிய ராஜாஜி தனது ஆட்சிக்கு முன்பு ஊரில் பிச்சைக்காரர்களே இல்லையோ என்று கேலியாகக் கேட்டார். அதற்கு ஜீவா நறுக் கென்று பதிலடி கொடுத்தார். –
ராஜாஜியின் ஆட்சிக்கு முன்பும் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். திருவள்ளுவர் காலத்திலிருந்து பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அதற்கு முன்பிருந்தும் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். ஆனால், திருவள்ளுவர் காலத்தில் இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்று கவனிக்க வேண்டும். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் என்று வள்ளுவர் சொன்னதை ராஜாஜி அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
பிச்சைக்காரர்கள் இருப்பது ஒரு விஷயம் என்றால், அதைப் பற்றிய ஆட்சியாளர்களின் மனோநிலை அதைவிட முக்கியமான விஷயம். அவர்களின் இருப்பை இயல்பானதாகக் கொண்டிருந்தார் ராஜாஜி. கம்யூனிஸ்டு இயக்கமோ அதை வேதனைமிக்க சமுதாயக் கேடாக நோக்கியது. பிச்சையெடுத்துத்தான் ஒருவன் பிழைக்க வேண்டும் என்றால் இறைவன் (அரசன்) ஒழிந்து போகட்டும் என வள்ளுவன் கொண்ட ஆவேசம் ஜீவாவிடம் குடி கொண்டிருந்தது.
ஒழியட்டும் குலக் கல்வி:
ராஜாஜி ஆட்சி என்றால் குலக் கல்வித் திட்டம் உடனே நினைவுக்கு வரும். பள்ளிப் பிள்ளைகள் பாதி நேரம் படித்துவிட்டு, மீதி நேரம் தொழில் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரின் திட்டம். தொழில் கல்வி என்றால் ஏதோ இந்தக் காலத்து பாலிடெக்னிக் கல்வி அல்லது பொறியியல் கல்வி என்று நினைத்துவிட வேண்டாம். அதற்கான சிறப்பு ஏற்பாடு ஏதுமில்லை. அவரவர் வீட்டிலேயே அப்பன் தொழிலைப் பிள்ளை கற்க வேண்டுமென்கிற ஏற்பாடு. அதனால் தான் இதற்கு குலக் கல்வி எனும் பட்டப் பெயர் கிடைத்தது. ஜீவா பேசினார் – 22 வயதிலிருந்து 11 வயதிற்குள் இருக்கின்ற இளம் மாணவனுக்கு எந்தத் தொழில் கல்வியைக் கற்றுக் கொள்ள வசதி ஏற்படும் என்று தான் நான் கேட்கிறேன். சின்னஞ் சிறு குழந்தைகள் தொழில் கற்றுக் கொள்ள முடியுமா?
பள்ளிப் படிப்பைக் கெடுத்து தந்தை செய்யும் வேலைக்கு சிறுவர்களை எடுபிடிகளாக்கும் இந்த மோசமான கல்வித் திட்டத்தை கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக எதிர்த்தது. ஜீவா தனது பேச்சை இப்படி முடித்தார் – கனம் ராஜகோபாலாச்சாரியார் ஜனநாயகத்திற்கு புறம்பாக இதைக் கொண்டு வந்து அமல் நடத்துவது ரொம்பவும் அநீதியானது, அக்கிரமமானது. ஆகவே, இதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.
தொகுதி இல்லை! அந்தக் கண்ணோட்டமும் இல்லை!
சர்வாதிகாரமாக, தானடித்த மூப்பாக நடந்து கொள்வதில் ராஜாஜி மிகவும் பிரபலமானவர். அதனாலேயே மக்களின் ஆதரவை மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆதரவை இழந்தார். தனது குணப் போக்கிற்கு பொது மக்களைச் சந்திக்கும் தேர்தல் முறை பொருந்தி வராது என்று புரிந்து கொண்டவர். அந்தக் காலத்தில் சென்னை மாகாணத்திற்கு மேலவை இருந்தது. அதன் மூலமாகத்தான் அவர் முதலமைச்சர் ஆனார். இதனால் புறக்கடை வழியாக வந்தவர் என்கிற அவப் பெயருக்கு ஆளானவர். இது தொடர்பாக சபையில் ஒரு சுவையான விவாதம் நடந்தது.
கீழவை உறுப்பினர்கள் பலரும் தத்தம் தொகுதி மக்கள் பிரச்சனைகளை அவையில் எடுத்துச் சொல்லி வந்தார்கள். இதைக் கேட்ட ராஜாஜி மிகுந்த வருத்தத்தோடு உறுப்பினர்களுக்கு தொகுதி கண்ணோட்டம் தான் இருக்கிறது, மாகாணக் கண்ணோட்டம் இல்லை என்றார். அடுத்துப் பேசிய ஜீவா சிரித்துக் கொண்டே கூறினார். – கனம் ராஜாஜி அவர்கள் மாகாண நலனையே முழுவதுமாய்ப் பார்க்கும் பண்பு படைத்தவர் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. எந்தத் தொகுதிக் கண்ணோட்டமும் அவர் பேச்சில் காண முடியாது. அதற்கு காரணம், அவர் எந்தத் தொகுதியிலும் தேர்தலுக்கு நின்று மக்களின் வோட்டுக்களைப் பெற்று வரவில்லை சபை கலகலவென்று சிரித்திருக்கும் என நம்பலாம். இத்தகைய சமயோசித சொல்லாடல்களும் ஜீவாவின் பேச்சில் நிரவியுள்ளன.
எம்.ஆர். ராதாவுக்கு எதிராக மசோதா:
குலக் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜாஜி பதவி விலக, 1954 ஏப்ரலில் காமராஜர் முதலமைச்சர் ஆனார். அந்த ஆண்டு இறுதியில் நாடகங்களை நெறிப்படுத்துவதாகச் சொல்லி அரசு ஒரு மசோதாவைச் சபையில் தாக்கல் செய்தது. குறிப்பாக நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இப்படியொரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். புனிதமானவர்கள் என்றும், தெய்வாம்சம் என்றும் பலரால் நெடுங்காலமாகப் போற்றப்பட்ட புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தடுப்பதே மசோதாவின் நோக்கம்என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதற்கு ஜீவா தந்த பதிலடி மிக நுணுக்கமானது, இன்றைக்கும் நெஞ்சில் ஏந்தத் தக்கது.
கண்ணாடிக்கு முன்போய் நின்ற மூக்கரையன் கண்ணாடியில் தன் கோரமான முகத்தைப் பார்த்துக் கொண்ட போது தன் உருவம் எவ்வளவு கோரமானது என்று சிந்தித்துப் பார்க்காது, கண்ணாடியை உடைத்தெறிந்தது போல, புராணங்களில் உள்ள ஆபாசத்தை எடுத்துச் சொன்னால், இதிகாசங்களில் உள்ள ஊழல்களை எடுத்துக் காட்டினால் காட்டுபவர்களின் மேல் சீற்றப்படுகிறார்கள் சிலர். (சிரிப்பு) காரணம், அவர்கள் மனம் புண்படுகிறதாம். வாஸ்தவம். புண்படத்தானே செய்யும். ஆனால், எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா? இவ்வளவு ஆபாசமானவைகள் எல்லாம் எங்கள் மதத்தில் இருக்கின்றனவே என்று எண்ணும்போது எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா என்று கேட்கிறேன்.
இதுவொரு வரலாற்று முரண். சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் கலைச் சுதந்திரத்தில் கை வைத்தது. அவர்களின் முரட்டுக் கையைத் தட்டிவிட்டு கலைஞர்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை வாங்கித் தரப் போராடியவர் ஜீவா.
முண்டாசுக் கவிஞனைக் காப்பாற்ற…
1955 மார்ச் மாதம் கல்வி மானியக் கோரிக்கையின் மீது ஜீவா பேசிய பேச்சிலிருந்து ஓர் இலக்கிய செய்தி கிடைக்கிறது. ஆங்கிலேயே ஏகாதிபத்திய ஆட்சியில் தான் பாரதியின் பாட்டுக்களுக்கு கத்தரிக்கோல் போடப்பட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியிலும் அது நடந்திருக்கிறது. ஜீவா சொல்லியிருக்கிறார் – எட்டையபுரத்தில் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது பாரதியார் பாட்டின் பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்ற அடி மட்டும் எடுக்கப்பட்டிருந்தது. பாரதியாரின் மறவன் பாட்டு கல்வி அமைச்சருக்கு நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். அதில் பல அடிகளில் டேஷ் போடப் பட்டிருக்கிறது. இப்போது இன்னும் அதிகப்படியாகப் போடப்பட்டிருக்கும்.
ஆக, காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் பாரதியார் பாடலுக்கு டேஷ் – வார்த்தைகளுக்குப் பதிலாக வெறும் கோடு போட்டிருக் கிறார்கள். அதை எதிர்த்தும் போராடியிருக்கிறார் ஜீவா. அந்த முண்டாசுக் கவிஞனைக் காப்பாற்ற இந்த மீசைக்காரப் பேச்சாளி தேவைப்பட்டார்.
ஜீவாவின் 98வது பிறந்த நாள் சிறப்பு வெளியீடாக இந்த நூல் வந்திருக்கிறது. 21-8-1907ல் ஜீவா பிறந்தார். இன்னும் ஓராண்டில் அவரின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. அதற்குக் கட்டியம்  கூறுவது போல் இந்தத் தொகுப்பு நூல் அமைந்து விட்டது. அவரின் நினைவைப் போற்றுவது கம்யூனிச இயக்கத்தை, அதன் வரலாற்றை, அதன் சமத்துவச் சிந்தனையை, அதன் கலை – இலக்கியப் பங்களிப்பை, அதன் தமிழ் தாகத்தை நமக்கு நாமே மீண்டும் நினைவுப் படுத்திக் கொள்வதாகும். புதிய தலைமுறையையும் அது உத்வேகப்படுத்தும்.

காஸ்ட்ரோவும் – புரட்சியும்!

அமெரிக்கர்களால் இந்த புரட்சிகர நடவடிக்கை யினை அழித்துவிட முடியாது; ஏனெனில் எம் தேச மக்கள் ஆயுதந்தாங்க பயிற்சி பெற்றவர்கள். ஆனால், எங்கள் தவறுகளை நாங்கள் திருத்திக்கொள்ள முடியாமல் போனால், இந்நாடு தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும். இந்தக் காரணத்திற் காகத்தான், நாங்கள் முழுமையான சமூக மாற்றத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
சோசலிச கியூபாவின் ஜனாதிபதி தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்கள் லே மாண்டே டிப்ளமாடிக் எனும் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு.இக்னாசியோ ராமனொட் என்பவருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் கருத்து இது. ஏறத்தாழ 100 மணி நேரம் நீடித்த இந்த பேட்டியின் விபரங்கள் 569 பக்கங்கள் கொண்ட பிடல் காஸ்ட்ரோ-இரு குரல்களில் ஒரு சரிதை எனும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகம் பல புதிய செய்திகளை கொடுக்கிறது. வெனிசூலாவின் சாவேஸ் 2002 ம் ஆண்டு ஏப்ரலில் ராணுவத்தின் திடீர் கலகத்தை சந்தித்தபோது அதை உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டும் என அவருக்கு காஸ்ட்ரோ ஆலோசனை வழங்கினார் என்பது போன்ற செய்திகளை உள்ளடக்கியது இப்புத்தகம். ஸ்பானிஷ் மொழியில் வெளியான இப்புத்தகத்தின் முதல் பதிப்பு, வெளியான பதினைந்தே தினங்களில் விற்றுத் தீர்ந்தன. மேலும் ஒன்பது மொழிகளில் இப்புத்தகத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பிடல் காஸ்ட்ரோவின் பேட்டியின் சில பகுதிகளை 20.5.2006 தேதியிட்ட சகாரா டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. பல ஆழமான தத்துவார்த்தமான விஷயங்கள் குறித்து விருப்பு வெறுப்பற்ற முறையில், தொலைநோக்குப் பார்வையும் சோசலிச கட்டுமானம் கட்டிக் காப்பாற்றப்பட வேண்டுமென்ற அக்கறை ததும்பும் விதமாக பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ள கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் குன்றியதையடுத்து அங்குள்ள அரசியலமைப்புச் சட்டப்படி தற்காலிகமாக தனது பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ளார். அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் இவரது பதவி பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரால் காஸ்ட்ரோவும், அண்ணன் பிடலுடன் சிறையில் இருந்தவர்; கொரில்லா யுத்தத்தில் பங்கேற்றவர்; ராணுவ தளபதியாக இருப்பவர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் முடிவிற்கேற்பவும், கியூப நாட்டுச் சட்டப்படியும் ரால் காஸ்ட்ரோ பதவி ஏற்றுள்ளார்.
பிடல் பதவி விலகியவுடன், அமெரிக்க மீடியாக்கள் பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றன. கியூபா மீது படை யெடுக்கவும், அமெரிக்க நாட்டின் மியாமியில் வாழும் கியூப நாட்டு மக்களில் படுபிற்போக்கான நபர்களைக் கொண்டு பொம்மை ஆட்சியை உருவாக்கவும் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் பகிரங்கமாக பேசுகின்றனர். ஏற்கனவே 80 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாகவும், கியூபாவில் கம்யூனிசத்தை ஒழித்து, ஜனநாயகத்தை திணிக்க திட்டம் உள்ளதாகவும், புஷ், ரைஸ் போன்ற ஏகாதிபத்திய தலைமை பீடமே டி.வி., ரேடியோ மூலம் ஸ்பானிஷ் மொழியில் பேசி வருகின்றனர். ஏகாதிபத்தியவாதிகளால்  அமெரிக்க மியாமியில் இருந்து நடத்தப்படுகிற ஜோஸ் மார்ட்டி ரேடியோ கியூப மக்களை கலவரம் செய்ய தூண்டி தினசரி அலறுகிறது. கியூபாவில் தேர்தல் நடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மூலம் ஆட்சி நடக்கிறது. காஸ்ட்ரோ மக்களின் பாசமிக்க தலைவரே தவிர, சர்வாதிகாரி அல்ல என்ற உண்மையை ஏகாதிபத்திய மீடியாக்கள் மறைக்கின்றன. மியாமியில் வாழும் ஒரு பெண்மணியிடம் பிடலுக்குப் பிறகு கியூபா எப்படி இருக்கும் என்று கேட்ட பொழுது, கியூபாவில் சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி இவைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. இவர்கள் அங்கே போய் ஏகாதிபத்தியத்தை திணித்தால், அதனால் ரத்தக்களறி ஏற்படும் என்று கூறியுள்ளார்.
(பிளாக் அமெரிக்கா.வெப்.காம்)
இந்தப் பின்னணியில் பிடல் காஸ்ட்ரோவின் பேட்டி உள்ளதை உள்ளபடி நமக்கு காட்டுகிறது. அதனைப் பார்ப்போம்.
(20.5.2006 ல் வெளிவந்த பேட்டி, அறுவை சிகிச்சை என்பது ஆகஸ்ட் மாதத்தில் இதனை மனதில் கொண்டு பேட்டியின் இப்பகுதியைப் படிக்கவும்.)
கேள்வி: உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உங்கள் சகோதரரான ரால் காஸ்ட்ரோ அடுத்த கியூப ஜனாதிபதி ஆவாரா?
பதில்: எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடனடியாக தேசிய சபை கூடி ராலை தேர்ந்தெடுக்கும். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். ராலுக்கும் வயதாகி வருகிறது, இது இயற்கையாகவே தலைமுறைகளின் பிரச்சனையாகும். கியூபப் புரட்சிக்காக பாடுபட்டவர்கள் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு நல்ல அம்சம். எங்களுக்கு முன்னால் மூத்த கியூப போராளிகளும், மார்க்சிய லெனினிய கட்சியான சோசலிஸ்ட் பாப்புலர் கட்சியின் தலைவர்களும் இருந்தனர். அவர்களுக்குப் பின்னால் புதிய தலைமுறையாக நாங்கள் இருந்தோம். அதற்குப் பின்னால் வந்தவர்கள் எழுத்தறிவு இயக்கம், கொள்ளையை எதிர்த்த போராட்டங்கள், தடைகளை எதிர்த்த போராட்டங்கள், பயங்கரவாதத்தை எதிர்த்த போராட்டங்கள், கிரான் போராட்டம், அக்டோபர் 1962-ல் நிகழ்ந்த ஏவுகணை பிரச்சனை, சர்வதேச சதிகளை எதிர்த்த போராட்டங்கள் என அனைத்து இயக்கங் களிலும் பங்கேற்றனர். தகுதி படைத்தவர்கள் ஏராளம் ஏராளம். பல விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்களின் தலைவர்கள், அறிவுஜீவிகள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்கள் இருக்கின்றனர். கியூப தேசத்தில் திறமை படைத்தவர்களுக்கு பஞ்சமில்லை. இத்துடன் புதிய தலைமுறையின் வாலிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக பணியாளர்களும் இணைந்துள்ளனர்.
கேள்வி:  அப்படியானால், ரால் காஸ்ட் ரோ உங்களைத் தொடர்ந்து அதிபரானால், அது தனி நபர் என்பதைவிட அடுத்த தலைமுறை, அதாவது தற்கால தலைமுறை தலைமைப் பொறுப்பேற்பதாகவே அர்த்தம் என்று சொல்ல வருகிறீர்கள்?
பதில்:  ஆம். தலைமையை ஒரு தலைமுறையிடமிருந்து மற்றோர் தலைமுறையே எடுத்துக் கொள்கிறது. நான் அதில் உறுதியாக இருக்கிறேன், அதை பலமுறை சொல்லியும் இருக்கிறேன். ஆனாலும், புரட்சி நடைமுறைக்கு பலப்பல ஆபத்துகள் இருக்கின்றன என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். தாமாகவே புறநிலை புரியாது புரிந்த தவறுகள்… அப்படிப்பட்ட தவறுகளும் இருந்தன. இந்த தவறுகளையும், குறிப்பிட்ட போக்குகளையும் கண்டறியாமல் விட்டதற்கு நாங்களே பொறுப்பு. இன்று, அந்த தவறுகளில் பல சரி செய்யப்பட்டுள்ளன, ஆனாலும் சில தவறுகளுக்கு எதிரான எங்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நான் நான்காவது தலைமுறை என்றழைக்கும் நபர்கள், முதல் தலைமுறையினரான எங்களைவிட அதிக ஞானம் படைத்தவர்களாக, இரண்டாம் தலைமுறையினரைக் காட்டிலும் மூன்று மடங்கு அறிவுத்திறம் படைத்தவர்களாக, மூன்றாம் தலைமுறையினரை விட இரண்டரை மடங்கு அதிகம் விபரமறிந்தவர்களாக இருக்கிறார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உன்னிப்பாக கவனியுங்கள் – இந்த தேசத்தின் கடற்கரைகளை பார்ப்பதைவிட, கியூபாவின் சமூக முன்னேற்றத்தை காண்பதற்காகவே அதிக மக்கள் வருவார்கள். ஏனெனில், எங்கள் தேசம் பலவற்றை செய்து கொண்டிருக்கிறது. ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஒழிக்க ஐ.நா. சபையின் பொதுச் செயலாளருக்கு தேவைப்பட்ட மனித வளத்தை சின்னஞ்சிறு கியூபாவால் கொடுக்க முடிந்தது. இன்று கியூப மருத்துவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்துமே, ஆயிரம் மருத்துவர்களைக்கூட எங்கள் மருத்து வர்கள் சென்ற இடங்களுக்கு அனுப்ப முடியவில்லை. 4000 மருத்துவர்களை அனுப்புவதாக ஐ.நா சபையிடம் உறுதி கொடுத்தோம். இதுவரை 3000க்கும் மேற்பட்டவர்களை அனுப்பியிருக்கிறோம். இது எங்களுக்கு ஓரளவு மன நிறைவைத் தருகிறது. 40 ஆண்டுகளாக தடைகளையும், பத்தாண்டுகள் நீடித்த சிறப்பு காலத்தையும் (Special Period) அனுபவித்த ஒரு நாடு இதைச் செய்ய முடிந்திருக்கிறது. மனித மூலதனத்தை வெறும் தற்பெருமையினாலோ அல்லது சமூகத்தோடு ஒட்டாத தனி மனிதப் போக்கினை ஊக்குவிப்பதாலோ உருவாக்க முடியாது.
கேள்வி: எந்த சிக்கலும் இல்லாமல் உங்கள் இடம் நிரப்பப்படும் என்று நம்புகிறீர்களா?
பதில்: நிச்சயமாக எந்த சிக்கலும் இல்லாமல் அது நடைபெறும். அதற்குப் பிறகும் கூட நிச்சயமாக எந்த பிரச்சனையும் வராது. ஏனென்றால் புரட்சி என்பது எந்த ஒரு பெரிய தலைவரையோ அல்லது தனிமனித வழிபாட்டையோ அடிப்படையாக கொண்டு நடைபெறுவதல்ல. புரட்சி என்பது கொள்கைகளின் அடிப்படையில் நடைபெறும். நாங்கள் எந்த கருத்துகளை பாதுகாக்க போராடுகிறோமோ, அது அனைத்து மக்களின் கருத்துகளாக மாறியுள்ளது.
கேள்வி: கியூப புரட்சியின் எதிர்காலம் பற்றி நீங்கள் அதிகம் கவலைப் பட்டதில்லை. ஆனால், சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா மற்றும் அல்பேனிய பின்னடைவுகள், வடகொரியாவின் அவல நிலை, கம்போடியாவின் தலைவிரித்தாடும் பயங்கரவாதம், புரட்சி வேறுவடிவத்தில் தோற்றமளிக்கும் மக்கள் சீனம் – இவற்றையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு கவலையாக இல்லையா?
பதில்: உலகின் முதல் சோசலிச நாடு, சோவியத் யூனியன், தன்னைத் தானே சரிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அது தன்னைத்தானே அழித்துக்கொண்டது என்பது நிச்சயம் கசப்பான அனுபவம்தான். உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாக இருந்த தேசம், மற்றொரு வல்லரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தேசம், பாசிசத்தை வீழ்த்திய தேசம் – சிதிலமடைந்தது என்ற இந்த நம்புவதற்கரிய நிகழ்ச்சிப்போக்குகளை நாங்கள் கவனிக்காமலோ அல்லது அது குறித்து கவலைப்படாமலோ இருக்கிறோம் என்று ஒரு விநாடிகூட நினைத்துவிடாதீர்கள். முதலாளித்துவ வழிகளில் சோசலிசத்தை நிர்மாணிக்க முடியும் என்று சிலர் நினைத்தார்கள். இது ஆகப்பெரிய வரலாற்றுத் தவறாகும். இதை தத்துவ ரீதியில் நான் விளக்க விரும்பவில்லை. ஆனால், தாங்கள் மிகப்பெரிய தத்துவ நிபுணர்கள், மார்க்ஸ், ஏங்கல்ஸ் மற்றும் லெனினின் புத்தகங்களை கரைத்துக்குடித்து தங்கள் உடம்பு முழுக்க நிரப்பிக் கொண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலர் செய்த தவறுகளை என்னால் பட்டியலிட முடியும். ஆரம்பகாலங்களிலும் புரட்சியின் பல கட்டங்களிலும், சோசலிசத்தை நிர்மாணிப்பது எப்படி என்பதை அறிந்த ஒருவர் இருக்கிறார் என்று நம்பியதே நாம் செய்த தவறு என பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். இன்றோ, சோசலிசத்தை கட்டமைப்பது எப்படி என்பது குறித்து தெளிவான கருத்து நமக்கு இருக்கிறது. ஆனால், உருவாக்கிய சோசலிச சமூக அமைப்பை தக்கவைத்துக் கொள்வது குறித்தும், சோசலிசமே தன்னை தற்காத்துக் கொள்வது குறித்தும் மேலும் பல தெளிவான கருத்துகள் நமக்கு தேவைப்படுகிறது. சீனா என்பது தனியான விஷயம். இன்று உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாக உருவாகி வரும் தேசம், வரலாற்றால் அழிக்க முடியாத ஒரு மகத்தான சக்தி, சில அடிப்படையான கோட்பாடுகளை பின்பற்றும் தேசம், ஒற்றுமையை முன்வைக்கின்ற, தன் வல்லமையை பலவீனப்படுத்திக் கொள்ளாத தேசமாக சீனா இன்று விளங்குகிறது. நான், கூர்ந்து கவனித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சோவியத் யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் பின்னடைவை சந்தித்தாலும், ஒரு சின்னஞ்சிறு தேசம், தடைகளால் சூழப்பட்ட தேசம், சிறப்பு காலம் எனும் வரையறையை இன்னும் முடித்திராத தேசம் – சோசலிச கியூபாவால் ஒரு சென்ட் பணம் கூடப்பெறாமல், மூன்றாம் உலக நாடுகளில் பயிற்சி பெற்ற நிபுணர்களோடு பங்கு பெற்று, உதவியளித்து சோசலிச கட்டுமானத்தை உருவாக்கும் பணியினைச் செய்ய முடிகிறது; அனைத்துத் துறைகளிலும் நிறைவான முன்னேற்றத்தை உறுதி செய்கிறது.
கேள்வி: ஆனால் பலர் இந்த கேள்வியை எழுப்புகிறார்கள். கியூபாவின் சோசலிச புரட்சி தோற்கக்கூடுமா?
பதில் : புரட்சிகள் தோல்வியிலேயே முடியும் என்பது விதியா என்ன? அல்லது நபர்கள் புரட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறார்களா என்று கேட்கிறேன்! மனிதர்களால், சமூகத்தால் புரட்சிகளை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற முடியுமா? நான் என்னையே இந்த கேள்வியை பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் – அமெரிக்கர்களால் இந்த புரட்சிகர நடை முறையினை அழித்துவிட முடியாது. ஏனெனில் எம் தேச மக்கள் ஆயுதம் ஏந்தத் தெரிந்தவர்கள். எம் தவறுகளையும் தாண்டி, உயர்ந்த நிலையிலான கலாச்சாரத்தையும், அறிவுத் திறனையும், மனச் சான்றினையும் பெற்றிருப்பவர்கள். அது இந்த தேசத்தை மறுபடியும் அமெரிக்காவின் காலனியாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்காது. ஆனால், இந்த தேசம் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முடியும்; புரட்சியும் அதனையே வீழ்த்திக் கொள்ள முடியும். நம்மால்தான் அதனை அழிக்க முடியும். நாம் நமது தவறுகளை திருத்திக் கொள்ளவில்லையென்றால், திருட்டு உள்ளிட்ட பல தீய பழக்கங்களை நாம் விட்டொழிக்கவில்லையென்றால் புரட்சியின் வீழ்ச்சிக்கு நாமே பொறுப்பாவோம். இந்த காரணத்திற்காகத்தான் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முழுமையான சமூக மாற்றத்தை நோக்கி நாங்கள் முன்னேறி வருகிறோம். மாற்றத்திற்கான அந்த வழிமுறைகளில் நாங்கள் இறங்க வேண்டியுள்ளது. அசமத்துவம், அநீதி உள்ளிட்ட பல சிக்கலான காலகட்டங்களை நாங்கள் அனுபவித்து விட்டோம். எந்த ஒரு திசை திருப்புதலும் இல்லாமல் நாங்கள் இதை மாற்றியாக வேண்டியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி


இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தத்துவார்த்த தமிழ் ஏடாக மலரும் மார்க்சிஸ்ட் முதல் மாத இதழ் இதோ தமிழக வாசகர்களையும் கட்சித் தோழர்களையும் ஆதர வாளர்களையும் சந்திக்கிறது. இப்படியொரு மாதாந்திர ஏட்டைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?
நாள்தோறும் புதுப்புது மாற்றங்கள் சர்வதேச அலவிலும் தேசிய அளவிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த அன்றாட நிகழ்ச்சிப் போக்குகள் பற்றிய மார்க்சிய பார்வையை கட்சி அணி களுக்குத் தரவேண்டியுள்ளது. அத்துடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி நமது வர்க்கக் கண்ணோட்டத்தையும் தத்துவார்த்த ரீதியாகத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அந்த நோக்கத்துடன்தான் கட்சியின் மத்தியக் கமிட்டி சார்பில் `தி மார்க்சிஸ்ட்’ என்ற மாத ஏடு வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் கட்சித் தலை வர்களின் கட்டுரைகளும், தத்துவார்த்த விளக்கங்களும், மார்க்சியக் கல்விக்கும், அரசியல் தெளிவுக்கும் உதவக்கூடிய முக்கிய சர்வதேசிய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின உரைகளும் குறிப்புகளும் வெளியாகின்றன.
இத்தகைய கட்டுரைகளை தமிழில் தருவதோடு, நாமும் சில பிரச்சனைகளில் கட்டுரைகளும் தயாரித்தளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் தமிழில் இந்த மார்க்சிஸ்ட் மாத ஏடு வெளிவருகிறது.
இந்த முதல் இதழில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் மூத்தவரான தோழர் முசாபர் அகமது அவர்கள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் ஆரம்பகாலத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான தோழர் பி.டி.ரணதிவே எழுதியுள்ள `கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் தத்துவமும்’ உள்ளடக்கிய அருமையானதொரு கட்டுரை பொருத்தமாக இடம் பெறுகிறது. நாடு முழுவதும் முசாபர் அகமதுவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இத்தருணத்தில் இக்கட்டுரை வெளியாவது இரட் டிப்பு பொருத்தம்.
தோழர் முசாபர் அவர்கள் எழுதிய “நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்” (Myself and the Communist Party of India) என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு, இந்திய கம்யூனிச இயக்கத்தின் அந்த ஆரம்பகால கட்டத்தில் கட்சியை உருவாக்குவதில் ஈடுபட்டவர் என்ற முறையில் பி.டி.ரணதிவே இக்கட்டுரையை வழங்கியுள்ளார்.
முசாபர் அகமதுவின் அரசியல் சிந்தனை வளர்த்தது எப்படி? கடுமையான குடும்பச் சூழலில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகப் பரிணமித்தது எப்படி என்பதை பி.டி.ஆர். அன்றைய இந்திய அரசியல் பின்னணியில் எடுத்துரைக்கிறார்.
1020ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களில் பலரும் காங்கிரஸ் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்திலோ அல்லது கிலாபத் இயக்கத்திலோ பங்கேற்றவர்கள்தான். இவை இரண்டிலுமே பங்கு பெறாத முசாபர் எப்படி கம்யூனிச இயக்கத்திற்கு வந்தார் என்பதை பி.டி.ஆர். விளக்குகிறார்.
ஜனநாயக சிந்தனையும், நாட்டுப்பற்றும் கொண்ட முசாபர் அன்றைய காங்கிரஸ் இயக்கம் முழங்கிய வந்தே மாதரம் பாடலில் இந்து மதக் கடவுளான துர்காதேவியை முன்னிறுத்தியிருந்ததைக் கண்டு காங்கிரசின் சுதந்திர லட்சியம் இந்துமத சார்புத்தன்மையை உடையதாகத்தான் இருக்கும் என்று கருதினார். காங்கிரசின் அந்தப் போக்கு முசாபருக்கு பிடிக்கவில்லை. இதே காலகட்டத்தில் முஸ்லீம் இளைஞர்கள் இயக்கம் முன்பு பிரிட்டிஷாரிடம் இழந்த முஸ்லீம் ராஜ்யத்தை அடைய மீண்டும் முயன்றதையும் முசாபர் பார்த்தார். அதையும் அவர் ஏற்கவில்லை. இந்த இரண்டு போக்குகளையுமே நிராகரித்து மதச்சார்பற்ற ஜனநாயக அரசிய லுக்கு வந்தவர் அவர்.
முசாபர் அவர்கள் வங்கமொழி கலை இலக்கியங்கள் மீதும் கலாச்சாரத்தின் மீதும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராவார். ஆரம்பத்தில் வங்க முஸல்மான் சாகித்ய பரிஷத் என்ற கலை இலக்கிய அமைப்பு ஒன்றையும் உருவாக்கி, நவயுகம் என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார். இயல்பாகவே அந்தப் பத்திரிகை தொழிலாளர் பிரச்சனை பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பல பிரச்சனைகளோடு அவரை சந்திக்கவரும் தொழிலாளர்கள் மற்றும் மாலு மிகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் வருகிறது. காரல் மார்க்ஸ், லெனின் எழுதிய சில நூல்கள் அவருக்குக் கிடைக்கின்றன. மார்க்சின் இடதுசாரி தீவிரவாதம் இளம் பருவக்கோளாறு என்ற நூலையும் படிக்கிறார். அவை அவருக்குப் புதிய வெளிச்சத்தை தருகின்றன. நாட்டின் முழுமையான விடுதலைக்கு சரியான வழி இதுவே என்ற பார்வையைத் தருகின்றன. இதை வைத்து எப்படி இயக்கத்தைக் கட்டுவது? இது சம்பந்தமாக சர்வதேசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், இயக்கத்தை உருவாக்கவும் அவர் மனம் விழைந்தது.
இக்காலகட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது மாநாடு நடைபெறுகிறது. அதில் கம்யூனிஸ்டுகள் அடிமைப்பட்டிருந்த கிழக் கிந்திய நாடுகளுக்குச் சென்று அங்கே கம்யூனிச இயக்கம் வளர உதவுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் சர்வதேச கம்யூனிஸ்ட்டுகள் (குறிப்பாக பிரிட்டனிலிருந்து) இந்தியாவிற்கும் வந்தனர். இந்தியாவின் பம்பாய், கல்கத்தா, சென்னை, லாகூர் ஆகிய நான்கு நகரங் களில் தொடர்பு கொண்டு இயங்கினர். கல்கத்தாவிலிருந்த முசாபர் அகமது, கம்யூனிஸ்ட் அகிலம் மூலமாகவே பம்பாயிலிருந்து செயல்பட்ட எஸ்.ஏ.டாங்கே, காட்டே போன்றவர்களை தெரிந்து கொள்கிறார். இவ்வாறு இந்தியாவில் அப்போது தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருந்த தோழர்களிடையே தொடர்பு ஏற்படுத்தியது.
1921ல் நடைபெற்ற கயா காங்கிரஸ் மாநாட்டில் எம்.என்.ராய், எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. அதன் பிறகே கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல்களை பிரிட்டிஷ் அரசு தீவிரமாக்குகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, கம்யூனிஸ்டுகளை முடக்குவதற்கு பல சதி வழக்குகளை ஜோடித்தது பிரிட்டிஷ் அரசு. 1922ல் கம்யூனிஸ்டுகள் மீதான முதல் சதி வழக்கு (பெஷாவர் சதிவழக்கு) தொடுக்கப்பட்டது. மாஸ்கோவில் தூரகிழக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சி பெற்று வந்த இளம் முஸ்லீகள் பலர் இந்த வழக்கில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன் பின் முசாபர் அகமது, டாங்கே, நளினி குப்தா, சவுகத் உஸ்மான் ஆகியோரைக் கைது செய்து அவர்கள் மீது கான்பூரில் சதிவழக்கு தொடுக்கப்பட்டது. இதை கம்யூனிஸ்டு சதி வழக்கு என்று அறிவித்தனர். மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் மன்னரது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தனர் என்று அவர்கள் மீது குற்றஞ் சாட்டிய இந்த வழக்கு இந்திய மக்களிடையே கம்யூனிஸ்ட் லட்சியங்களைப் பிரபலப்படுத்தியது. அப்போது பிரிட்டனின் ஆளும் கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் பலர் இதை எதிர்த்தனர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க முயன்றவர்களுக்கு சிறைத் தண்டனையா என்று கண்டித்தனர். அவர்களை விடுதலை செய்யக் கோரினர். நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முசாபரும் இதர தோழர்களும் இரண்டு ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுகின்றனர்.
விடுதலையான முசாபர் அகமது கணவாணி (மக்கள் குரல்) என்ற பத்திரிகையைத் துவக்கினார். அதிலே கம்யூனிச இயக்கம் பற்றியும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதினார்.
1924 முதல் 1927 வரையிலான மூன்றாண்டு காலத்தில் பல மாநிலங்களில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி உருவாக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகின. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சுயாட்சியே போதுமென்று காங்கிரஸ் கட்சி கோரி வந்தபோது கம்யூனிஸ்டுகள்தாம் முதல் முறையாக இந்தியாவுக்கு பரி பூரண சுதந்திரமே லட்சியம் என்று முழங்குகிறார்கள். காங்கிரசில் இருந்த ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டு பின்னர் அதையே காங்கிரசின் குரலாக ஒலித்தனர்.
இப்படி கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்ததுடன் காங்கிரசுக்குள்ளேயே முற்போக்கான சிந்தனைகள் பிரதிபலித்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பீதியடைந்தனர். கம்யூனிஸ்டுகளை மீண்டும் வேட்டையாடத் துவங்கினார்கள். 1929ல் மீரட் சதி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே நீண்ட வழக்காகப் பதிவு பெற்ற இவ்வழக்கில் முசாபர் உள்ளிட்ட 31 தோழர் களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. முசாபருக்கு ஆயுள் தண்டனை, பிலிப்ஸ் பிராட், பென் பிராட்ஸ், ஹாட்சிஸன் ஆகிய மூன்று பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகளும் இவ்வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்படி பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணி தலைவர்கள் இந்திய கம்யூனிச இயக்க வளர்ச்சிக்கு உதவியதை முசாபரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதன் மூலம் பி.டி.ஆர் கோடிட்டுக் காட்டுகிறார்.
மீரட் சதி வழக்கில் விதிக்கப்பட் தண்டனையைக் கண்டித்து பிரிட்டனிலும் இயக்கம் வெடித்தது. ஆயுள் தண்டனை உள்பட முன்பு விதிக்கப்பட்டிருந்த தண்டனைகள் குறைக்கப்பட்டன. எனினும் தோழர் முசாபர் ஆறரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே 1926ல் விடுதலை செய்யப்பட்டார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் இத்தகைய அடக்கு முறைகள் இந்திய கம்யூனிச இயக்கத்தின் அந்த முன்னோடிகளை ஒரு சிறிதும் கலக்கவில்லை. மாறாக வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தையே தமது கம்யூனிஸ்ட் இயக்கப் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொண்டனர் கம்யூனிஸ்ட்டுகள்.
தேசிய விடுதலைக்காகப் போராடுகிற இந்திய பூர்ஷ்வாக்களுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது அவசியம் என்றும், அதே சமயத்தில் கம்யூனிஸ்டுகள் தமது தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதும் அவசியம் என்றும் சர்வதேச கம்யூனிச இயக்கம் வழிகாட்டிய விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் பி.டி.ஆர். நமக்களிக்கிறார். சுதந்திரப் போராட்டம் பற்றிய வர்க்க ரீதியான சரியான மதிப்பீட்டின் அடிப்படையில் இவ்வாறு வழிகாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இயக்கத்துடன் இணைந்ததும், விடுதலைப் போராட்டம் புதுவேகம் பெற்றதும் இறுதியில் 1947ல் இந்தியா விடுதலை பெற்றதும் நமக்கு தெரிந்த வரலாறு.
இந்தப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிற முசாபரின் போராட்ட வாழ்க்கை சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சரியான மார்க்சிய-லெனினிய அணுகுமுறையை நிலைநாட்டுவதற்காக நடைபெற்ற போராட்டத்திலும் முசாபரின் பங்கு முக்கியமானது.
வலதுசாரி திருத்தல்வாதப் போக்கையும், இடதுசாரி அதிதீவிரப் போக்கையும் எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த முசாபர் அகமது வர்கள் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாவதற்கு முன்னர் நடைபெற்ற தெனாலி சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்த காட்சி மறக்க முடியாதது. உடல் தளர்ந்த நிலையிலும் உள்ளத்தின் உறுதி கொஞ்சமும் தளராதவராக 1964ல் உருவான மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்தார். இந்திய மக்களுக்கு ஒரு சரியான பாதையைக் காட்டி வரும் நம் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றினார். 1968ல் அவரது மூச்சு நிற்கும் வரை, கம்யூனிச இயக்கத்தில் அவரது பணி நிற்காமல் தொடர்ந்தது.
முசாபரின் வரலாறு தனிமனிதனின் வரலாறல்ல. இந்திய கம்யூனிச இயக்கத்துடன் – மார்க்சிஸ்ட் கட்சியின் பரிணாமத்துடன் இரணடறக் கலந்து நிற்கும் வரலாறு என்பதை பி.டி.ஆரின் இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஒரு சரியான கொள்கை நிலைக்காக, மக்களின் உண்மையான விடுதலைக்காக சுரண்டலற்ற புதிய சமுதாயத்திற்காக இறுதி வரை போராடிய அந்த மாவீரனின் வரலாறு இன்றைய இளம் தோழர்களுக்கு ஒரு அனுபவ வழிகாட்டியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

தோழர் ஹரிபட்….

சென்னை நகர வரலாறு பலவிதமாக எழுதப்படுகின்றன, ஆனால் சென்னை நகரை உருவாக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாறு சரியாக சொல்லப்படாமலே உள்ளது. அப்படி எழுதப்படுமானால் தோழர் ஹரிபட்டின் வாழ்க்கை இடம் பெறும். ஹரிபட்டின் வாழ்க்கை ஒரு தனி மனிதனின் வாழ்க்கையல்ல. சென்னை நகர பாட்டாளி வர்க்க போராட்டத்தில் இரண்டற கலந்த வாழ்க்கையாகும்.
கர்நாடக மாநிலத்தில் மங்களுர் அருகே பிறந்த ஹரிபட் இளமைப் பருவத்தை தாண்டுவதற்கு முன்னரே வாழ்க்கையின் கடுமைகளை அனுபவித்தவர்.  ஆரம்ப பள்ளியில் கால்வைத்ததோடு சரி, சென்னை நகரம் தன்னை உயர்த்தும் என்று வந்து விட்டார். இடையில் ஆந்திரா வழியாக வந்த பொழுது அங்கே சில காலம் தங்க நேர்ந்தது, அங்கு தெலுங்கான விவசாயிகள் போராட்டத்தை கண்டும் கேட்டும் கற்றது ஏராளம். அவரது லட்சிய நகர் சென்னையில் இத்தகையோருக்கு புகலிடமாக இன்றும் இருப்பது ஹோட்டல் தொழிலே. ஆரியபவனில் டேபிள் துடைக்கும் பையனாக ஹரிபட் வேலைக்கமர்ந்தார். இந்த இளைஞன் அடுத்த சில ஆண்டுகளில் சென்னை நகர தொழிற்சங்க இயக்கத்தில் புதிய திருப்பத்தை உருவாக்குவதில் பங்களிக்கப் போகும் முன்னோடிகளில் ஒருவனாக ஆவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சினிமாவில் நடித்து ஹிரோ ஆகவேண்டுமென்ற கனவோடு இருந்த ஹரிபட்டே, எதிர்பார்த்திருக்கமாட்டார். ஹோட்டல் தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தது அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாயிற்று, கம்யூனிஸ்ட் தலைவர்களின் உதவியோடு பொது அறிவை வளர்த்துக் கொண்டார், ஆங்கிலம் கற்றார், சட்டங்கள், தீர்ப்புகள் பற்றிய ஞானத்தை வளர்த்துக் கொண்டார். அதைவிட நிர்வாகம் தரும் லாப நட்டக்கணக்கு, வரவு செலவு கணக்கு இவைகளை அலசும் ஞானத்தை வளர்த்துக் கொண்டார். ஒப்பந்தங்களிலே ஒளிந்து கிடக்கும் ஏமாற்றுக்களை காண்பதில் கை தேர்ந்தவரானார். தொழிலாளர்களை, பிளவுபடுத்தவும், ஏமாற்றவும் கூறப்படும் கருத்தக்களை அனுபவங்களை காட்டி அம்பலப்படுத்துவதில் நிபுணரானார். இதற்காக அவர் டியுடோரியல் காலேஜில் சேரவில்லை. கம்யூனிச இயக்கமே அவரது ஆசிரியராக இருந்தது என்றால் மிகையாகாது. சுருக்கமாக கம்யூனிஸ்ட் இயக்கம் எவ்வாறு பாட்டாளி வர்க்க முன்னோடிகளை உருவாக்குகிறது என்பதின் அத்தாட்சியாக அவர் இருந்தார்.
அன்று சென்னை நகரத் தொழிலாளர்கள் மரத்தை நம்பி படரும் கொடி போல் ஒரு தலைவனை சார்ந்தே இருந்தனர். சங்கம் என்பது ஒரு பெயரளவு அமைப்பே. அதற்கு தலைமை தாங்குபவர்களே தொழிலாளர்களின் தலைவிதியை நிர்ணயித்தனர். அதற்கு காரணங்கள் இருந்தன.1920 களில் சிங்கார வேலர். திரு.வி.க,  சக்கரை செட்டியார் போன்ற தன்னலம் கருதாத தலைவர்கள் தொழிலாளர்களிடையே அவரவர் வழிகளிலே விழிப்புணர்வை கொண்டுவர பாடுபட்ட தால் அந்த நம்பிக்கை ஆழமாக வேர்விட்டிருந்தது. சுருக்கமாக சொன்னால் தொழிலாளர்கள் தொழிற்சங்க அமைப்பையும் கூட்டு சக்தியையும் சார்ந்து நிற்காமல் தலைவர்களை நம்பியே இருந்தனர்.
இந்த பலகீனத்தை புரிந்து கொண்ட சென்னை நகர தொழில் அதிபர்கள்.முதலாளி நிர்ணயிக்கிற தலைவரை ஏற்றுக் கொண்டால் வேலைக்கு ஆபத்தில்லை. அதைவிட்டு, தொழிலாளர்கள் கூட்டு பேர சக்தியை காட்டினால் அரசு, அடியாட்கள் உதவியுடன் தொழிலாளர்கள் அடக்கப்படுவர் என்பதை நடைமுறையாக்கிக் கொண்டனர். இந்த நடைமுறை இந்திய முதலாளிகள் பிரிட்டீஷ் முதலாளிகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். இது 1921ல் பின்னி மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோறி வேலைநிறுத்தம் செய்ததை அரசும் பின்னி நிர்வாகமும் இனைந்து கையாண்ட  சூழ்சிகளாகும், வேலை நிறுத்தத்தை உடைக்க வெளியாட்களை வேலைக்கு அமர்த்தல், சாதி, மத வேறுபாடுகளை,பயன்படுத்தி பிளவுபடுத்தல், அடியாட்கள் மூலம் கலவரத்தை தூண்டுதல். துப்பாக்கி சூட்டின் மூலம் பணியவைத்தல். தொழிலாளர்கள் பணிந்து ஆலை திறந்தாலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை, தலைமை தாங்கியவர்களை வேலைக்கு எடுக்காமல் குடும்பங்களை பட்டினியில் சாகவிடுதல் ஆகியவைகளே. இந்த யுக்திகளை தொழிலாளர் உறவுக்கு  அரசும், முதலாளிகளும் இலக்கனமாக்கிக் கொண்டனர்.
வேலை நிறுத்த உரிமை சட்டத்திலிருந்தாலும், மீண்டும் பணிக்கமர்த்த நீதிமன்றத்தை நாடலாம் என்றிருந்தாலும் அவைகள் ஏட்டுச் சுரைக்காயாக இருந்தன. இன்றும் அது தான் நிலை.
1950களில் விடுதலைக்குப் பிறகும் துறைமுக தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தொழிற்சங்க இயக்கம் முடக்கப்பட்டது. டிராம்வே தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1967ல் ஆட்சி மாறியது. ஆட்சியை மாற்ற முடியுமென்றால் தொழிற்சாலைகளில் நிலவும் கூலி அடிமை முறைக்கும் முடிவு கட்ட முடியுமென்ற நம்பிக்கை தொழிலாளர்கள் மனதிலே  பிறந்தது. ஆனால் கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண்டடிபட்டு செத்தான் அத்தான் என்ற சோகம் தொடர்ந்தது. இத்தகைய கசப்பான அனுபவங்களாலும், சிங்காரவேலரின் வழியில் பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன் போன்ற மார்க்சியவாதிகளின் பொதுவான அரசியல் கிளர்ச்சி பிரச்சாரத்தின் தாக்கத்தாலும் 1970களில்  சென்னை நகர தொழிற்சங்க இயக்கத்தின் திசை மாறியது..
அந்த மாற்றத்தை கொண்டு வருவதில் ஹரிபட்டின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஹோட்டல் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகியாகி. கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானார். மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபின் வி.பி சிந்தனும் அவரும் இனைந்து அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், முறைசாரா தொழிலாளர் சங்கம் என்று உழைப்பாளி வர்க்கத்தின் உடலுழைப்பால் நடை பிணமாக ஆகும் அடித்தட்டு தொழிலாளர்களை திரட்டினர். இவர்களது நோக்கம் மிக தெளிவாக இருந்தது.
  1. தொழிலாளர்களின் உரிமைகள் கூட்டு பேர சக்தி மூலமே காக்க முடியுமே தவிர, ஒரு  குறிப்பிட்ட தலைவரின் சாதுர்யமல்ல என்பதை தொழிலாளர்களை உணர வைப்பது.
  2. அரசியல், மற்றும், சாதி, மத வேறுபாடுகளை தாண்டிய வர்க்க ஒற்றுமை அவசியமென்பதை உணர வைப்பது,
  3. வேலையில்லாதோரும், அத்தக்கூலிகளும்  முதலாளி களின் கருவியாக பயன் படுவதை தடுக்க அவர்களையும் பாட்டாளி வர்க்கத்தின் பகுதியாக கருதி கூட்டுபேர சக்தி மூலம் காசுவல் காண்டிராக்ட் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
  4. தொழிற் தகராறில், காவல் துறையை தலையிட வைக்கும் அரசின் கோட்பாட்டை கூட்டு சக்தி மூலமே தடுக்க முடியும் என்ற ஞானத்தை தொழிலாளர்களுக்கு கொடுப்பது.
இந்த 4 அம்சமும் எந்த அளவிற்கு சென்னை நகர தொழிலாளிக்ளை அசைத்திருக்கும் என்பதை அளக்கும் வாய்ப்பாக 1971ல் எம் ஆர். எப் தொழிலாளர்கள் போராட்டம் வெடித்தது. எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் அவர்கள் விரும்பிய வழக்கறிஞராக இருந்த குசேலரை சங்க தலைவராக தேர்ந்தெடுத்தனர். நிர்வாகம் குசேலரை விரும்பவில்லை. சங்க தலைவரோடு சுமூகமாக பேசி பிரச்சினைகளை தீர்க்காமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ய தள்ளியது. இதனால் எம் ஆர்.எப் தொழிலாளர் போராட்டம் தொழிற்சங்கத்திற்கு தலைவரை தேர்வு செய்யும் உரிமை யாருக்கு? என்ற பிரச்சினையாக ஆனது. அந்த உரிமை தொழிலாளர்களுக்கில்லை என்று  தி.மு.க அரசும், நிர்வாகமும் கருதியதால் சாம பேத தான தண்ட யுக்திகளை கையாளத் தொடங்கின. 1921ல் பின்னிமில் நிர்வாகமும், அரசும் கையாண்ட அதே சூழ்ச்சிகள் மீண்டும் அரங்கேறின. திருவெற்றியூர் கலவர பூமியானது. தொழிலாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டன,பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். 144 தடை உத்திரவால் தெருக்கள் ரவுடிகள் ராஜ்யமானது.
மார்க்சிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக்குழு எம்.ஆர்.எப் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாவட்டம் தழுவிய கூட்டுப் போராட்டத்தை உருவாக்கிட செயல்பட்டது. ஹரிபட், சிந்தன், பரமேஸ்வரன்  மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள்  ஆலை தோறும் சென்று வாயிலில் தொழிலாளர்களிடம் பேசி ஆதரவு திரட்டினர். சென்னை நகர தொழிற்சங்கங்கள் வர்க்க ஒற்றுமைக்கு அடையாளமாக திரண்டு நிற்க வேண்டினர். இதன் விளைவாக அண்ணா சாலையில் (அன்று மவுன்ட்ரோடு) 10 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்ட தொழிலாளர்களின் பேரணி பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சிக்கு  அடையாளமாக அமைந்தது.
அரசு தொழிலாளர்களை பயமுறுத்த, குசேலரோடு, வி.பி.சிந்தன், ஹரிபட், பரமேஸ்வரன் நால்வரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் தள்ளியது. ஆனால் போராட்டம் மடியவில்லை, பொது வேலை நிறுத்தமாக ஆனது.  முதலாளி தொழிலாளி உறவை குடும்ப உறவாக பார்க்க வேண்டும் என்ற திராவிட கருத்தின் பொய்மை எடுபடவில்லை. மலையாளி- தமிழன் என்ற இன பேத கருத்தும் காற்றிலே பறந்தது. அந்த சென்னை நகர பாட்டாளிவர்க்கத்தின் எழுச்சி முதலாளிகளையும் அரசையும் பின்னுக்குத் தள்ளியது. தொழிற்சங்கத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை தொழிலாளர்களுக்குண்டு என்பதையும், அதனைப் பறிக்க வன்முறை பயன்படாது என்பதையும் உணரவைத்தது. அதன் பிறகே தலைவர் யார் என்பதை தீர்மாணிப்பது தொழிலாளர்களின் உரிமை என்பதை அரசும்,முதலாளிகளும் அங்கிகரிக்க தொடங்கினர்.
ஹரிபட் சென்னையில் பல தொழிற்சங்கங்களுக்கு தலைமை பொறுப்பிற்கு தொழிலாளர்களால் அமர்த்தப்பட்டுள்ளார். அதன் பிறகு தர்மபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை கட்டும் பொறுப்பேற்றார். அங்கும் ஆலைத் தொழிலாளர்களின் வர்க்க விழிப்புணர்வை தூண்டும் பணியை தொடர்ந்தார்.
ஹரிபட்டை பற்றி சுருக்கமாக கூறுவதென்றால்  தொழிற் சங்க அரங்கில் அவர் பணிபுரிந்தாலும், அவர்  அரசியல் கலக்காத வடிகட்டின தொழிற்சங்கவாதியாக மாறவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் விழிப்புணர்விற்காக பாடுபட்ட மார்க்சியவாதியாகவே வாழ்ந்தார். அதற்கு காரணம் தோழமை உணர்வின் எடுத்துக்காட்டாக இருந்த ஒரு கூட்டுணர்வின் அங்கமாக இருந்ததே. வி.பி. சிந்தன், பரமேஸ்வரன், கஜபதி, பி.ஜி.கே கிருஷ்ணன், இவர்களின் கூட்டால் உருவானவர். சென்னை நகர பாட்டாளிவர்க்கத்தின் விழிப்புணர்விற்காக பாடுபட்ட அந்த குழுவின் பங்கில்லாமல் 1970-1990 வரை சென்னை நகரில்  பாட்டாளி வர்க்க போரட்டம் எதுவும் நடக்க வில்லை, என்பதே இந்தக் குழுவின் சிறப்பாகும். அவர்களது வேலைப்பாணி  சமதர்ம சமூகத்தை உருவாக்க ஆசைப்படு வோருக்கு சிறந்த வழிகாட்டியாகும். தொழிற்சங்க இயக் கத்தை பாட்டாளி வர்க்கத்தின் பல்கலை கழகமாக்க ஆர்வமுள்ளோருக்கு எடுத்துக்காட்டாகும்.

சிங்காரவேலரின் அரசியல் உத்தி!

தமிழக சிந்தனை வரலாற்றுப் பாரம்பரியத்தில் எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் மேன்மை போற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதிகார பீடத்தில் இருந்து வந்துள்ள உடைமை வர்க்கங்களின் சிந்தனை மரபுகள் உழைப்புக்கும், உழைக்கும் வர்க்கப் பண்பாட்டுக்கும் மதிப்பளிப்பதில்லை. முரண்பட்ட இந்த இரண்டு போக்குகளும் தமிழக சிந்தனை மரபில் உண்டு.
20ம் நூற்றாண்டில் உழைப்பின் மேன்மை பேசுகிற இந்த சிந்தனை மரபின் தொடர்ச்சியாக புரட்சிகர சமூக மாற்றத்தில் தொழிலாளி வர்க்கத்தின் வல்லமையை உணருகிற கட்டம் உருவானது. 1908ல் வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் இந்த கருத்தாக்கத்திற்கு வரத்துவங்கினர். இந்த கருத்தாக்கம் மேலும் வலுப்பெற 1917 ரஷியப் புரட்சியின் தாக்கம் முக்கிய பங்கு வகித்தது. எனினும், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வல்லமை எனும் கருத்தாக்கம் வெளியிலிருந்து இறக்குமதியான கருத்தாக்கமே என்கிற புரிதல் சரியானது அல்ல. தமிழக சிந்தனை மரபில் இருந்து வந்துள்ள உழைப்பின் மேன்மை போற்றும் கருத்தியலின் தொடர்ச்சியே தொழிலாளி வர்க்கம் புரட்சிகரமானது என்ற கருத்திற்கு இட்டுச்சென்றது. மார்க்சியம் இதற்கு அறிவியல் அடிப்படையை வழங்கியது.
இந்த வளர்ச்சிப் போக்கில், சிங்காரவேலரின் செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உழைப்பாளி வர்க்கத்தின் அரசியலை, விடுதலை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக மாற்றிய பெருமை சிங்காரவேலரையே சாரும். இதையொட்டிய அவரது படைப்பாற்றல் மிகுந்த முன்முயற்சிகளில் ஒன்றுதான் அவர் நிறுவிய தொழிலாளி – விவசாயிகள் கட்சி.
தொழிலாளர் சுயராஜ்ஜியம்
1920ம் ஆண்டுகளிலேயே தொழிலாளர் விவசாயி வர்க்கக் கூட்டணி பற்றிய சிந்தித்தவர் தோழர் சிங்காரவேலர். இந்த வர்க்கங்கள் இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்று தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள, ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முனைந்தார். அக்கட்சிக்கு ஹிந்துஸ்தான் தொழிலாளர் விவசாயி கட்சி எனப் பெயரிட்டார்.
இக்கட்சிக்கென்று, ஹிந்துஸ்தான் லேபர் கிஸான் கெஜட் என்ற பத்திரிகையை அவர் துவக்கினார். 1923ம் ஆண்டு மே தினமன்று கட்சி யின் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
தொழிலாளர், விவசாயிகள் கட்சியின் நோக்கம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, பாட்டாளி வர்க்க அரசு அமைப்பது என்பதை சிங்காரவேலர் அந்த மேதினக் கூட்டத்தில் அறி வித்தார். இந்தியத் தொழிலாளரின் குறிக்கோள், தொழிலாளர் சுயராஜ்யமாக இருக்க வேண்டு மென்று அவர் முழங்கினார்.
சுயராஜ்ஜியத்தில் நிறைவான வாழ்க்கை நடத்தும் உரிமை தொழிலாளர்களுக்கும், விவ சாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். தொழிலாளி வர்க்கத்தலைமை கொண்ட அரசே உண்மையான சுயராஜ்ஜியம் என்று பொருள்பட, சுயராஜ்ஜியம் இன்றேல் வாழ்வில்லை; தொழிலாளி இன்றேல் சுயராஜ்ஜியமில்லை என்றும் அழுத்தமாகக் கூறினார். பிரிட்டிஷ் ஆட்சி அகன்று முதலாளித்துவ உடைமை வர்க்கங்களின் அரசு அமைவதற்கு பதிலாக, உழைப் பாளி வர்க்க அரசு அமைய வேண்டுமென்பது அன்றைய கம்யூனிஸ்டுகளின் இலட்சியப் பிரகடனம். இதன் செயல்வடிவமே சிங்காரவேலர் அமைத்த தொழிலாளர் – விவசாயிகள் கட்சி.
காங்கிரசோடு நட்புறவு ஒப்பந்தம்
பெரும்பான்மையான தொழிலாளர் விவ சாயிகள் தங்களது உரிமைகளை உணராது, முதலாளித்துவ வர்க்கங்களின் பின்னால் அணி திரள்கின்றனர். அவர்கள் ஒடுக்கும் வர்க்கங்களின் கட்சிகளுக்கு ஆதரவாகத் திரளுகிற நிலை நீடித்து வருகின்றது,
இப்பிரச்சனையைப் பற்றி 1920ம் ஆண்டு களிலேயே தீவிரமாக சிந்தித்தவர் தோழர் சிங்காரவேலர். தனது உழைப்பைச் சுரண்டுப வனுக்கு அடிபணியும் உழைப்பாளி வர்க்கங்களை எவ்வாறு சரியான வழிக்குக் கொண்டு வருவது? உழைப்பாளி வர்க்கங்கள் தங்கள் நலனையும், உரிமைகளையும் பாதுகாத்து முன்னேறுவதற்கு எத்தகு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? இவை அனைத்துக்கும் சிங்காரவேலர் தீர்வுகளை நாடினார்.
பெரியாரோடு இணைந்திருந்த சமயத்திலும், சிங்காரவேலர் சாதி ஒழிப்பு, சமய மூடநம்பிக்கை கள் எதிர்ப்பு உள்ளிட்ட சுயமரியாதைக் கருத்துக் களை இடைவிடாது எழுதி வந்தார். அதுமட்டு மல்லாது, ஐக்கிய முன்னணி உத்தியையும் அவர் கைவிடவில்லை.
சுயமரியாதைக்காரர்களிடம் சமதர்ம பிரச்சாரம்
சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும், அவர்கள் மூலமாக மக்களுக்கும் சிங்காரவேலர் பொதுவுடைமைச் சமூகம் பற்றிய கருத்துக்களை பரவச் செய்தார். சுயமரியாதை இயக்கத்தவர்கள்,  ஜனநாயகம் எனும் பெயரில் முதலாளித்துவம் பேசுகிற பசப்பு வார்த்தைகளை நம்பிடக்கூடாது என்றார் சிங்காரவேலர்.
சுயமரியாதைக்காரர்களாகிய நாம், டிமாக்கிரஸி என்ற மோசத்தை இனியும் கையாளுவதா? என்று கேட்டுவிட்டு, … அல்லது சோவியத் முறையென்ற உண்மையான திட்டத் தைக் கையாளுவதா? என்று கேட்டு, சிந்திக்கத் தூண்டினார். சோவியத் முறை என்பது என்ன வென்ற விளக்கத்தையும் அளித்தார்.
… எந்தத் தொழிலை எவன் புரிகின்றானோ, எந்தெந்த நிலத்தை எவன் உழுது பயிரிடுகின்றா னோ அவன்தான் அவனுடைய ஆட்சியை நடத்த வேண்டும். அந்த அரசியலுக்கு அவனே உரிய வன்; மற்றவர்கள் யாருக்கும் எவ்வித ஆதிக்கமும் கொடுக்கலாகாது…
எந்த இயக்கங்களோடு ஒரு கம்யூனிஸ்டு உறவு கொண்டாலும், சமதர்ம சமுதாயம் எனும் இலட்சியத்திற்காக மக்களைத் திரட்டுவதில் உறுதியாக உழைக்க வேண்டுமென்பது சிங்கார வேலர் கற்றுத்தரும் பாடம்.
சிங்காரவேலர் படைத்த இரண்டு திட்டங்களும், தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றுத் தேவைகள். தமிழர்களின் பண்பாட்டு நிலைகள், கருத்தியல் உணர்வுகளின் வெளிப்பாடே இந்தத் திட்டங் கள். இந்தத் திட்டங்கள் சிங்காரவேலர் எனும் தனிப்பட்ட மனிதரின் மேதைமையால் எழுத்துக்களாக வடிவம் பெற்றிருக்கலாம். ஆனால் இந்தத் திட்டங்களின் தேவை தமிழ்ச்சமூகத்தில் இயல் பாக கருக்கொண்டிருந்தது.
சுயமரியாதையும், சமதர்மமும் செயல்பட்டது தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுத் தேவை. அது இடையில் தடைபட்டது. ஒரு சூழ்ச்சியின் விளைவே. ஆங்கிலேய ஏகாதிபத்தியமே இதில் முதல் குற்றவாளி.
ஒரு சமூகப் போராளி, ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கான சூழல் நிலவாத போது, நம் பிக்கையிழந்து சோர்ந்து போய்விடக் கூடாது. இந்த புரட்சிகரமற்ற சூழல், அவருக்கு புதிய பரிசோதனைகளை நிகழ்த்துவதற்கான சுதந்திரத் தைத் தருகிறது.
புதிய முயற்சிகளுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. ஜெர்மானிய கம்யூனிஸ்ட் போராளி ரோசா லக்சம்பர்க், புரட்சிக்கான சரியான நேரத்திற்காக பொறுமையாகக் காத்திருப்பதில் பயனில்லை; ஒருவர் இவ்வாறு காத்திருந்தால், அந்த தருணம் வரவே வராது; பக்குவம் பெறாத முயற்சிகளாக இருப்பினும், அவற்றைத் துவக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த பக்குவமற்ற முயற்சிகளின் தோல்வி களில்தான் புரட்சிக்கான அகநிலை வாய்ப்புக்கள் உருவாகின்றன. இதனால்தான், மாவோ, தோல்விகளிலிருந்து (மீண்டும்) தோல்விக்கு, பிறகு இறுதி வெற்றிக்கு என்றார். இதையே இலக்கியவாதி சாமுவேல் பெக்கெட் கூறினார்: மீண்டும் முயற்சி செய்; மீண்டும் தோல்வியை பெற்றிடு; மேலான தோல்வியை மீண்டும் பெற்றிடு. .இந்த உறுதியை சிங்காரவேலர் வாழ் வில் காணலாம்.
சோவியத் புரட்சி போன்ற மாற்றம் நிகழ்கிற சூழல் நிலவிடாதபோது, சிங்காரவேலர் கம்யூனிச இலட்சியங்களுக்காக பாடுபட்டார். படைப் பாற்றல்மிக்க  பல முன்முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றில் தோல்வி பல கண்டாலும், மீண்டும் முயற்சிகளைத் தொடர்ந்தார். கம்யூனிஸ்டுகளின்  ஐக்கிய முன்னணி உத்திகளை இன் றைக்கும் தமிழகத்தில் பலர் பழித்தும், இழித்தும் எழுதி வருகின்றனர். இந்த எழுத்துக்களுக்கு அஞ்சியும், சங்கடப்பட்டும், சிங்காரவேலர்  காட் டிய பாதையில் தீரமுடன் நடைபோட முற் போக்காளர்கள் சிலரும் கூட தயங்குகின்றனர். ஆனால், மேலான தோல்வி கிட்டினும், சிங்கார வேலர் காட்டிய வழியே இறுதி வெற்றி பெறும்.
– சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் – அறக்கட்டளை – சிங்காரவேலர் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் பிரசுரமானது

Monday 25 July 2016

பார்ப்பன புரட்சியாளர்கள்

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் உள்ளது. ஒரு பார்ப்பனன் புரட்சியாளனாக மாற முடியுமா என்று. ஆனால் நடைமுறையில் அதற்கான சாத்தியக் கூறுகள் எப்போதுமே இருப்பது போல தெரியவில்லை. தன்னுடைய உச்சிக்குடுமியையும், பூணூலையும் எடுத்துக்கொண்ட ஒரு பார்ப்பனன் புரட்சிகர குணங்கள் கொண்டவனாக மாறிவிடுவானா? இது மட்டுமே ஒரு பார்ப்பனன் புரட்சியாளனாக மாறிவிட்டதற்கான அடையாளமா? நிச்சயமாக இல்லை. அதை அவன் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் வாழ்வின் இறுதிவரை நிரூபிக்க வேண்டும். இந்த இரண்டில் எது ஒன்று குறைந்தாலும் அவன் அம்பலப்பட்டு அசிங்கப்படுவது உறுதி. ஆனால் பார்ப்பனர்களால் ஒருபோதும் தங்களை அப்படி மாற்றிக்கொள்ள முடியாது.
 இந்தியாவை பிடித்த சாபக்கேடுகளில் மிக முக்கியமானது சாதியே ஆகும். நம்மில் ஒவ்வொருவருக்கும் சாதி அழிக்கப்பட வேண்டும் என்று கருத்து வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியில் தவிர்க்க இயலாமல் ஏற்பட்டு இருக்கலாம். தான் காதலித்த பெண்ணை கரம் சேராமல் போகும் போதோ இல்லை குடும்ப உறுப்பினர்கள், சொந்த பந்தங்கள் ஆகியோருக்குப் பயந்து தன்னைவிட சாதியில் கீழ்நிலையில் உள்ள நண்பனின் உறவை முற்றிலும் முறித்துக்கொண்டபோதோ சமூகத்தில்  சாதி ஆணவ கொலைகளோ, இல்லை சாதிய படுகொலைகளோ நடைபெறும்போதோ அதைப் பார்த்துக் கொதித்துப்போய் இந்தச் சாதியத்தின் மீது மிகக்கொடிய வெறுப்பை நாம் அடைந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் சாதி மீதான வெறுப்பை பல பேர் தன்னுடைய சுயநல வேட்கையின் காரணமாகவும் சமூக அழுத்தத்தின் காரணமாகவும் மாற்றிக்கொண்டு அப்பட்டமான சாதிவெறியர்களாக மாறிவிடுவதுண்டு.
 ஆனால் சில பேர் எவ்வளவுதான் இடர்பாடுகள் ஏற்பட்ட போதும் தன்னுடைய கொள்கையில் இருந்து தவறாமல் எப்படியாவது சாதியின் மீதும் சாதிவெறியர்கள் மீதும் தாக்குதலைத் தொடுக்கவேண்டும் என மனதால் உந்தப்பட்டு முழு மனதோடு அதற்காக பாடுபடுவதாய் சொல்லிக்கொள்ளும் அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். ஆரம்பத்தில் அது போன்ற அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் தோழர்கள் உண்மையில் அது போன்ற அமைப்புகளின் முழு செயல்பாடுகளையும் உற்று நோக்கியோ கட்சி தலைமைகளின் யோக்கியதை என்னவென்று பார்த்தோ எல்லாம் சேர்வது கிடையாது. இதற்காகவே கட்சியால் நியமிக்கப்பட்டுள்ள தோழர்களின் பேச்சைகேட்டோ இல்லை அது போன்ற அமைப்புகள் நடத்தும் பத்திரிக்கைகளைப் படித்தோ உந்தப்பட்டு அது போன்ற கட்சிகளில் சேர்கின்றனர்.
  கட்சியில் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தான் கொண்ட கொள்கைக்காக தன்னை முழுவதுமாகவே அந்தக் கட்சியின் வளர்ச்சிக்காக அதில் கரைத்துக் கொள்கின்றனர். அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி, அவர்கள் சொன்ன வேலைகளை செய்து தன்னுடைய நேர்மையையும் சாதி ஒழிப்பிலும் மற்ற பிற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போன்றவற்றிலும் தனக்குள்ள உணர்வு பூர்வமான நிலையை நிரூபிக்கின்றனர். தெருத்தெருவாய் அலைந்து பத்திரிக்கைகள் விற்பது, அவர்கள் பார்த்து அமைப்புக்கு அழைத்து வர சொல்லும் நபர்களை கால்கடுக்க காத்திருந்து சந்திப்பது, சில சமயம் அவர்கள் தரும் போலி முகவரியில் பலமணிநேரம் காத்துக்கிடந்து அவமானப்பட்டுத் திரும்புவது என அனைத்தையும் சகித்துக்கொண்டு அவர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர். ஆனால் அப்படி பாடுபட்ட தோழர்களை ஒரு நேர்மையான அரசியல் இயக்கம் எப்படி நடத்தும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் அதுவும் பார்ப்பனர்கள் தலைமைதாங்கும் ஒரு அரசியல் இயக்கமாக இருந்தால் அங்கே சூத்திர சாதி தோழர்களுக்குக் கிடைக்கும் மரியாதை எப்படி இருக்கும் என்று நாம் சொல்லவே தேவையில்லை.
  ஒரு பார்ப்பனன் முற்போக்கு இயக்கங்களில் குறிப்பாக திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் போன்றவற்றில் இருந்தால் அந்த இயக்கங்கள்  எந்த மாதிரியான நிலையை எட்டும் என்றால் அது காலப்போக்கில் சாதிவெறியர்களை நக்கிப்பிழைக்கும் கீழ்த்தரமான நிலையை எட்டும். இது போன்ற கீழ்த்தரமான நிலையை எட்டிவிடக் கூடாது என்பதற்காக தான் பெரியார் ஒரு போதும் திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனர்களை உள்ளே வர முடியாமல் தடுத்தார். ஒரு வேளை வந்திருந்தால் இந்நேரம் திராவிட கழகம் கூட ஒரு சங்கர மடமாக மாற்றப்பட்டிருக்கலாம். இதை நன்கு உணர்ந்த பார்ப்பன கூட்டம் திராவிட இயக்கங்களை விட்டுவிட்டு தன்னுடைய சித்தாந்த அரசியல் மேலாண்மையை நிலைநாட்டிக்கொள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்களை தேர்ந்தெடுத்தன.
 இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை அதில் பார்ப்பன மற்றும் சாதி இந்துக்களின் செல்வாக்கே மேலோங்கி நிற்கின்றது. இந்தத் தரித்திரம் பிடித்த நிலை தங்களை புரட்சிகர கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்ளும் இயக்கங்கள் வரை ஊடுரூவி நிற்கின்றது. இந்தியாவில் முற்போக்குப் பேசினாலும் சரி, இல்லை பிற்போக்கு பேசினாலும் சரி அதை நாத்தம் பிடித்த பார்ப்பன வாய்களின் மூலமே நாம் கேட்கவேண்டி இருக்கின்றது. பார்ப்பன மூளைகளுக்கு இங்கே எப்போதுமே செல்வாக்கு அதிகம்.
 சாதி ஒழிப்பு என்ற கொள்கையைக் கட்சியின் அடி நாதமாக வைத்திருக்கின்றோமே அப்படி என்றால் கட்சியின் தலைமைப் பொறுப்பை நாம் யாருக்குக் கொடுத்தால் பெறும்பாண்மை சமூகமாக உள்ள சூத்திரசாதி மக்களின் ஆதரவையும், சிறுபாண்மை இன மக்களின் ஆதரவையும் வென்றெடுக்க முடியும் என்ற குறைந்த பட்ச நேர்மையைக்கூட அது போன்ற பார்ப்பன தலைமையின் கீழ்  இயங்கும் கட்சிகள் கடைபிடிப்பதில்லை. “ஏண்டா ஒரு பார்ப்பனனை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப்பொறுப்பில் உட்காரவைத்து அழகு பார்க்கின்றீர்கள்” என்று  யாராவது கேட்டால் “அவர் சாதி ஒழிப்பு பேசுகின்றார், மதத்தை எதிர்த்து நிற்கின்றார், குறிப்பாக மாட்டுக்கறி தின்கின்றார் அதனால் அவரை பார்ப்பனர் என்று சொல்ல முடியாது. அதனால் தான் பொறுப்பை ஒப்படைத்து இருக்கின்றோம்” என்று பதில் வரும். நீங்கள் தொடர்ச்சியாக கட்சியில் இருக்கவேண்டும் என்றால் “ஏண்டா நாயே மற்ற சாதிக்காரனுக்கெல்லாம் இந்தக் குவாலிபிகேசன் கிடையாதா” என்று எப்போதுமே கேட்கக்கூடாது. கேட்டால் அவ்வளவுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் படி நீங்கள் கட்சியில் இருந்து தனிமைப்படுத்தப்படுவதோ இல்லை நீக்கப்படுவதோ நடக்கலாம்.
   அது போன்ற பார்ப்பனர்களால் தலைமைதாங்கி நடத்தப்படும் கட்சியின் கடைமட்ட குறிப்பாக சூத்திரசாதி ஊழியர்கள் தங்களது அனைத்துவிதமான இன்பங்களையும் கட்சியின் வளர்ச்சிக்காக தியாகம் செய்து பாடுபட்டால் அதனால் விளையும் அனைத்துப் பயன்களையும் மேல்மட்டத்தில் இருக்கும் சில புல்லுருவிகளே எப்போதும் அறுவடைசெய்து கொள்கின்றார்கள். சாதிவெறியர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அயோக்கியர்களிடம் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் கைகுலுக்கிக் கொள்கின்றார்கள். கட்சிக்குக் கணிசமாக நிதிகொடுத்தால் சங்கராச்சாரியையே அழைத்துவந்து சாதி ஒழிப்பு பற்றியும், பச்சமுத்துவை அழைத்துவந்து கல்வி உரிமையைப் பற்றியும் பேசவைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை கட்சியின் கடைமட்ட ஊழியர்கள் என்பவர்கள்  எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு லெவி கட்டவும், தெரு நாய்களைப்போல அலைந்து கட்சி சொல்லும் வேலைகளை ஏன் எதற்கு என்று கேள்விகேட்காமல் செய்வதற்கும்தான் தேவை. மற்றபடி மற்ற நேரங்களில் அவர்களுக்குக் கட்சி ஊழியர்கள் என்பவர்கள் திசு பேப்பர்தான்.
 கட்சியில் கடைமட்ட நிலையில் உள்ள பல தோழர்கள் அதன் வளர்ச்சிக்காக பாடுபட, பார்ப்பன கலாச்சார விழுமியங்களால் உள்வாங்கப்பட்ட தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகளில் உள்ள அறிவுஜீவிகள் கட்சியே தாங்கள் தான் என்று கருதி தங்களை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்கின்றனர். தங்களது புகைப்படங்களைக் கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல் மார்க்ஸ்,எங்கெல்ஸ், லெனின் போன்றோரின் புகைப்படங்களுக்கு மத்தியில் போட்டுக்கொண்டு தானும் ஒரு புரட்சியாளன் தான் என கூசாமல் சொல்லிக்கொள்கின்றனர். பெயருக்கு முன்னால் புரட்சி என்று போட்டுக்கொண்டாலே புரட்சி பேச்சாளன், புரட்சி கவிஞன், புரட்சி பாடகன் என எல்லா புண்ணாக்குகளும் மாறிவிடுகின்றார்கள். இவர்கள் செய்த ஒரே புரட்சி கட்சியில் உள்ள மற்ற தோழர்களின் உழைப்பை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தன்னை பெரிய புடுங்கிகள் போன்று விளம்பரப்படுத்திக் கொண்டதுதான்.
 இவர்களால் ஒரு போதும் இந்திய சமூகத்தில் புரட்சியைக் கொண்டுவரமுடியாது. அப்படி கொண்டுவந்தால் அது ஒரு பார்ப்பன புரட்சியாகத்தான் இருக்கும். பெளத்த இந்தியாவை புஷ்யமித்தர சுங்கன் தலைமையில் நடைபெற்ற பார்ப்பன புரட்சி அழித்ததல்லவா அதுபோன்ற ஒன்றாகவே அது இருக்கும்.
 எப்போது ஒரு முற்போக்கு அரசியல் இயக்கத்திற்குள் பார்ப்பனன் நுழைகின்றானோ அப்போதே அந்த அமைப்பு சீரழிய ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். எப்படி மனிதக்குரங்கில் இருந்து மனிதன் தோன்றிய பிறகும் கூட எச்ச உறுப்பாக குடல்வால் உள்ளதோ அதே போல ஒரு பார்ப்பனன் என்னதான் முற்போக்கு வாதியாக வேடம் போட்டாலும் அவனுக்குள் அந்த ஆதிக்கசாதி மனோபாவமும் அடுத்தவனைக் கீழ்த்தரமாக பார்க்கும் இழி பார்வையும் ஒரு போதும் மறையாது. பூணூலின் தடங்கள் அவனுக்குள் மறைந்து எச்ச உறுப்பாக இருந்துக்கொண்டே இருக்கும்.
  இன்று கம்யூனிஸ்ட் இயக்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பார்ப்பன தலைமைகளை நாம் கண்டிப்பாக எதிர்க்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இல்லை என்றால் அந்தப் பார்ப்பன நச்சுக்கூட்டம் ஒட்டுமொத்த கட்சியையுமே களங்கப்படுத்திவிடும் அபாயம் உள்ளது. அந்தக் பார்ப்பன கூட்டம் சாதிவெறியர்களுடனும், மதவெறியர்களுடனும் கள்ள உறவை பேணுவதை அறியாமல் அதுபோன்ற கட்சிகளுக்காக பாடுபட்டு நம்முடைய வாழ்க்கையே நாம் கேவலப்படுத்திக்கொள்வோம். அவர்கள் கட்சி உறுப்பினர்களா இல்லை சாதிவெறியர்களா என்ற ஒரு சூழ்நிலை வந்தால் நிச்சயம் அவர்கள் சாதிவெறியர்களின் பின்னால் தான் நிற்பார்கள். இதில் இருந்தே பூணூலின் எச்சம் அவர்களுக்குள் இருப்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அனைத்து மட்டங்களில் இருந்தும் இந்தப் பார்ப்பன கூட்டத்தை நாம் விரட்டியாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இல்லை என்றால் சமூகமாற்றம் என்ற கொள்கையையே நாம் கைகழுவ வேண்டிய நிலை ஏற்படலாம். நாம் இங்கே நேரடியாக எந்தக் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவிரும்பவில்லை. காரணம் இது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டுமே உரிய பிரச்சினையாக பார்க்கவில்லை பார்ப்பனர்கள் முக்கிய பொறுப்பில் அமரவைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளுக்கும் குறிப்பாக முற்போக்கான ஒரு சமூக மாற்றம் வேண்டி போராடிக்கொண்டிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இது பொருந்தும் என்பதனால்தான்.
- செ.கார்கி

தாமிரபரணியில் மிதக்கும் கேள்விகள்

நன்றி: தி இந்து
நெல்லையில் கொக்கிரகுளம் சாலையைக் கடக்கும்போதெல்லாம், தாமிரபரணி கரையெங்கும் இறைந்து கிடந்த ஒற்றைச் செருப்புகளின் சித்திரம் மனதில் எழுந்துகொண்டேயிருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அந்தக் கோரச் சம்பவத்தின் காட்சிகள் மனதில் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. 1998 ஜூலை 23-ல் நடந்த அந்த அசம்பாவிதம் அடக்குமுறைகளால் உரிமைக் குரல்கள் நசுக்கப்படும் அவலத்தை உணர்த்தும் சாட்சியமாக இருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மணிமுத்தாறு அணைக்கு மேலே இருக்கும் மாஞ்சோலை தேயிலை தோட்டம், ‘பம்பாய் பர்மா டிரேடிங் கார்பொரேஷ’னுக்குச் சொந்தமானது. சிங்கம்பட்டி ஜமீன் மேற்படி நிறுவனத்திற்கு 110 ஆண்டுகாலக் குத்தகைக்குக் கொடுத்ததன் அடிப்படையில் 8,374 ஏக்கர் நிலத்தில் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு இத்தோட்டத்தில் பயிரிடப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் 1,650 நிரந்தரத் தொழிலாளர்களும், 750 தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிந்துவந்தனர். இங்கே சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப். மற்றும் புதிய தமிழகம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என பல சங்கங்கள் செயல்பட்டுவந்தன.
அடிமாட்டுச் சம்பளம்
இங்குள்ள தோட்டத் தொழிலாளர்களுக்குத் தினக்கூலியாகக் கிடைத்தது வெறும் 53 ரூபாய்தான். இந்தச் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை நகர்த்தக் கூட முடியாமல் புழுங்கிக்கொண்டிருந்தனர் தொழிலாளர்கள். இவர்கள் வசித்த தகர வீடுகளில் ஆடு, நாய் போன்ற சிறுபிராணிகள் வளர்ப்பதற்குக்கூடத் தடை விதித்திருந்தது தோட்ட நிர்வாகம்.
1998 மக்களவைத் தேர்தலின்போது தென்காசி தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வந்தபோது, இந்தப் பிரச்சினைகள் அவரது கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன. தேர்தலுக்குப் பிறகு இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்ட அவர், 1998 ஜூலையில் 25 அம்சத் கோரிக்கைகளை நிர்வாகத்தின் முன்பு வைத்து போராட்டத்தைத் தொடங்கினார். சேரன்மாதேவி கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் என பல மட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதையடுத்து, 1999 ஜூனில் மாவட்ட ஆட்சியர் இல்லத்துக்கு மாஞ்சோலை தோட்டத் தொழி லாளர்களைத் திரட்டிச் சென்று முறையிட்டார் அவர்.
போராடிய 451 தொழிலாளர்களைக் கைது செய்து, திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைத்து விட்டது காவல் துறை. அதற்கு மறுநாள், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், தங்களது கணவன்மார்களை விடுதலை செய்யச் சொல்லி 230 பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, தடை உத்தரவைக் காரணம் காட்டி, போராடிய 198 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களும் திருச்சிராப்பள்ளி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜூலை 23-ல் புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஆகிய அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்று மனு கொடுக்க முடிவெடுத்தன. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த 451 ஆண் தொழிலாளர்கள், மற்றும் 198 பெண் தொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே பிரதானக் கோரிக்கையாக அன்றைக்கு இருந்தது. தினக்கூலியை 53 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
ஊர்வலத்தின் முன்புறம், ஜீப்பில் சென்ற தலைவர்கள் கிருஷ்ணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.பழனி, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் அடங்கிய 10 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க அனுமதி அளித்தது காவல் துறை. உள்ளே பேச்சுவார்த்தைக்குச் செல்வது குறித்து விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே விபரீதம் தொடங்கியிருந்தது. கூட்டத்தைக் கலைக்க தடியடிப் பிரயோகம் செய்தும், கண்ணீர்ப் புகை வீசியும் விரட்டியடிக்கத் தொடங்கினர் போலீஸார். இருபுறமும் சூழப்பட்ட மக்கள், வேறு வழியின்றி, தாமிரபரணி ஆற்றை நோக்கி ஓடத் தொடங்கினர்.
அதிகாரத்தின் கொடுங்கரம்
ஆறடி நீள சவுக்கு கம்புடன் அவர்களைத் துரத்திய போலீசார், அவர்களைத் தண்ணீருக்குள் தள்ளினர். வெளியே வர முயன்றவர்களைக் கம்பால் தாக்கி மீண்டும் உள்ளே தள்ளினர். ஒன்றரை வயதுக் குழந்தை விக்னேஷை இடுப்பில் வைத்தபடி ஓடிய ரத்தினமேரிக்கும் தலையில் அடி விழுந்தது. ஆற்றில் விழும் முன்பு, கையில் இருந்த குழந்தையை நழுவவிட்டார். குழந்தையும் மூச்சு முட்டி இறந்தது. குழந்தையின் மரணம், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைக் கொந்தளிக்க வைத்துவிடும் என்று கருதிய போலீஸார், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸ் வேனின் பின் சீட்டில் வைத்து மறைக்கப் பார்த்தனர். இதைக் கவனித்த பத்திரிகையாளர்கள் அதைப் படமெடுக்கத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் கேமராக்களைப் பிடுங்கி, பிலிம் ரோலை உருவி எறிந்தனர்.
போலீஸார் பெண்களைத் தாக்குவதைப் பார்த்த மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் பழனி, வேனை விட்டுக் கீழிறங்கி, அதைத் தடுக்க முற்பட்டார். அவரையும் போலீஸார் கடுமையாகத் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை இரண்டு பெண்கள் தூக்கிச் சென்று ஒரு ஆட்டோ அமர்த்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டார் அவர்.
ஆற்றில் நீச்சலடித்து மறுகரை ஏறியவர்களையும் போலீஸாரின் சவுக்குக் கம்புகள் பதம் பார்த்தன. மீறி வெளியே வந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு பாலம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர். ஈரத் துணியோடு கரையேறிய பெண்களையும் விட்டு வைக்கவில்லை. ஒரு மணிநேரம் கழித்து களேபரம் முடிவுக்கு வந்ததுபோல் இருந்தது. நெல்லை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவே தோன்றியது.
மறுநாள், காலையில் நான்கு பிணங்கள் கரை ஒதுங்கின. அடுத்த நாள் ஆறு பிணங்கள். அதற்கடுத்து மூன்று என எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல, விபரீதத்தை மக்கள் உணரத் தொடங்கினர். இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இறந்து போன 17 பேரில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்றரை வயது விக்னேஷ் என்ற குழந்தையும் அடக்கம். மீதி 14 பேர் ஆண்கள். மூன்று இஸ்லாமியர்கள், ஒரு கிறிஸ்தவ மீனவர், ஏனைய 13 பேரும் தலித்துகள்.
யார் குற்றம்?
இந்தக் கொடூர நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி மோகன் தலைமையிலான குழுவைத் தமிழக அரசு அமைத்தது. "ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் ஒழுங்குமுறையற்ற நடத்தை, கண்ணியக்குறைவான முழக்கங்களை எழுப்பியது, காவலர் மீதும் நிர்வாகத்தின் மீதும் தரக்குறைவானச் சொற்களைப் பயன்படுத்தியது உள்ளிட்டவை, காவலர்கள் அவர்கள் மீது பலப் பிரயோகம் செய்வதற்குக் காரணமாக அமைந்தன. கும்பலைக் கலைக்க பலப்பிரயோகம் அவசியம்தான். எனினும், ஊர்வலத்தில் வந்தவர்களை ஆற்றுப் படுகையில் துரத்திச் சென்ற செயல், அத்துமீறிப் பலப்பிரயோகம் செய்ததாகிறது. அந்தச் செயலுக்கு பொறுப்பான காவல் துறை உதவி ஆணையாளர்கள் இருவரும், பாளையங்கோட்டை வட்டாட்சியரும் கட்டாயப் பணி ஓய்வில் செல்ல வேண்டும்” என்றது அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை.
“11 இறப்புக்கள் விபத்து என்ற வகையின் கீழ் வரும். ஏனைய 6 பேர் கொக்கிரகுளம் சாலையில் முதற்கண் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக இறந்து விட்டனர். காயங்களோடு அவர்கள் ஆற்றுப்படுகையில் இறங்கினர். அவர்களைக் காவல் துறையினர் துரத்தினர். ஆற்றைக் கடக்க முயற்சி செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர்.." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்ட நீதிபதி மோகன், “ஹோரேஸ் எனும் கவிஞன் எழுதிய ‘நடுவு நிலை பிறழாத/ வேறுபாடு அறியாத/ மரணத்தின் கோரக்கால்கள்/ இந்த ஏழை மகனின்/ குடிசைக் கதவில்/ எட்டி உதைத்தன" என்ற கவிதை வரிகளைப் போல, இவர்கள் வீர மரணத்தைத் தழுவவில்லை என்பது உண்மையே என்றாலும், தவறான வழியில் அனுப்பப்பட்டுவிட்டனர் என்றே கருதுகிறேன். ஒரு ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்களே மற்ற அரசியல் கட்சிகளின் ஊர்வலத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு வருவதும் நிகழ்வதால், இந்த மக்கள் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதில்லை. எனவே, அரசியல் கட்சிகளின் இது போன்ற ஊர்வலங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்கிறேன்” என்று அறிக்கையை முடித்தார்.
இன்றைய நிலை
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, மாஞ்சோலைக்குத் திரும்பிச் செல்ல விரும்பாத தொழிலாளர்கள் பலரும் பாளையங்கோட்டை அருகில் உள்ள ஆரோக்கியநாதபுரம் என்ற கிராமத்தில் தங்கினர். ஊர் மக்கள் அவர்களுக்கு உணவு அளித்துவந்தனர். கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் இங்கே வந்து, தங்கியிருந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லியும் வேண்டிய உதவிகளும் செய்தனர். மாஞ்சோலையில் இருந்த தொழிலாளர்களில் பலர் சமவெளிக்கு இறங்கி வந்து, மாற்று வேலைக்குச் சென்று விட்டனர்.
இன்றைக்கு மாஞ்சோலைத் தோட்டத்தில் மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில தோட்டத் தொழிலாளர்கள் 1500 பேர் இருக்கிறார்கள். சுமார் 300 கேரள மாநிலக் குடும்பங்களும் அங்கே உள்ளன. 200 பேர் மட்டுமே தமிழர்கள். இன்றைய தேதிக்கு ரூ. 252 கூலி. எந்தத் தொழிற்சங்கமும் அங்கே இல்லை. அனுமதியின்றி யாரும் அங்கே உள்ளே நுழைய முடியாது. மயான அமைதி!
ஆறாத வடு
இன்றும் ஜூலை 23 நெல்லையில் பரபரப்பான நாளாகவே மாறிப் போயிருக்கிறது. பதற்றத்தைத் தவிர்க்க, அஞ்சலி செலுத்த வரும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு தலித் அமைப்புக்கும் வெவ்வேறு நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன. தாமிரபரணிக் கரையின் இருபுறமும் உள்ள சாலைகளில் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்படுகின்றனர். போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. அஞ்சலி செலுத்தும் இயக்கங்கள் தத்தமது சக்திக்கேற்றபடி தொண்டர்களைத் திரட்டியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரேயுள்ள நதிக்கரையில் சிறிய ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துகின்றன. இவர்களுக்கு இடையில், மெல்லிய சிறு விசும்பல்களுடன் மனதில் பொங்கியெழும் துக்கத்தைச் சுமந்து நிற்கிறார்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த உறவினர்கள்.
- இரா.நாறும்பூநாதன், எழுத்தாளர்.