Thursday 28 July 2016

காஸ்ட்ரோவும் – புரட்சியும்!

அமெரிக்கர்களால் இந்த புரட்சிகர நடவடிக்கை யினை அழித்துவிட முடியாது; ஏனெனில் எம் தேச மக்கள் ஆயுதந்தாங்க பயிற்சி பெற்றவர்கள். ஆனால், எங்கள் தவறுகளை நாங்கள் திருத்திக்கொள்ள முடியாமல் போனால், இந்நாடு தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும். இந்தக் காரணத்திற் காகத்தான், நாங்கள் முழுமையான சமூக மாற்றத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
சோசலிச கியூபாவின் ஜனாதிபதி தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்கள் லே மாண்டே டிப்ளமாடிக் எனும் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு.இக்னாசியோ ராமனொட் என்பவருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் கருத்து இது. ஏறத்தாழ 100 மணி நேரம் நீடித்த இந்த பேட்டியின் விபரங்கள் 569 பக்கங்கள் கொண்ட பிடல் காஸ்ட்ரோ-இரு குரல்களில் ஒரு சரிதை எனும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகம் பல புதிய செய்திகளை கொடுக்கிறது. வெனிசூலாவின் சாவேஸ் 2002 ம் ஆண்டு ஏப்ரலில் ராணுவத்தின் திடீர் கலகத்தை சந்தித்தபோது அதை உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டும் என அவருக்கு காஸ்ட்ரோ ஆலோசனை வழங்கினார் என்பது போன்ற செய்திகளை உள்ளடக்கியது இப்புத்தகம். ஸ்பானிஷ் மொழியில் வெளியான இப்புத்தகத்தின் முதல் பதிப்பு, வெளியான பதினைந்தே தினங்களில் விற்றுத் தீர்ந்தன. மேலும் ஒன்பது மொழிகளில் இப்புத்தகத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பிடல் காஸ்ட்ரோவின் பேட்டியின் சில பகுதிகளை 20.5.2006 தேதியிட்ட சகாரா டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. பல ஆழமான தத்துவார்த்தமான விஷயங்கள் குறித்து விருப்பு வெறுப்பற்ற முறையில், தொலைநோக்குப் பார்வையும் சோசலிச கட்டுமானம் கட்டிக் காப்பாற்றப்பட வேண்டுமென்ற அக்கறை ததும்பும் விதமாக பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ள கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் குன்றியதையடுத்து அங்குள்ள அரசியலமைப்புச் சட்டப்படி தற்காலிகமாக தனது பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ளார். அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் இவரது பதவி பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரால் காஸ்ட்ரோவும், அண்ணன் பிடலுடன் சிறையில் இருந்தவர்; கொரில்லா யுத்தத்தில் பங்கேற்றவர்; ராணுவ தளபதியாக இருப்பவர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் முடிவிற்கேற்பவும், கியூப நாட்டுச் சட்டப்படியும் ரால் காஸ்ட்ரோ பதவி ஏற்றுள்ளார்.
பிடல் பதவி விலகியவுடன், அமெரிக்க மீடியாக்கள் பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றன. கியூபா மீது படை யெடுக்கவும், அமெரிக்க நாட்டின் மியாமியில் வாழும் கியூப நாட்டு மக்களில் படுபிற்போக்கான நபர்களைக் கொண்டு பொம்மை ஆட்சியை உருவாக்கவும் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் பகிரங்கமாக பேசுகின்றனர். ஏற்கனவே 80 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாகவும், கியூபாவில் கம்யூனிசத்தை ஒழித்து, ஜனநாயகத்தை திணிக்க திட்டம் உள்ளதாகவும், புஷ், ரைஸ் போன்ற ஏகாதிபத்திய தலைமை பீடமே டி.வி., ரேடியோ மூலம் ஸ்பானிஷ் மொழியில் பேசி வருகின்றனர். ஏகாதிபத்தியவாதிகளால்  அமெரிக்க மியாமியில் இருந்து நடத்தப்படுகிற ஜோஸ் மார்ட்டி ரேடியோ கியூப மக்களை கலவரம் செய்ய தூண்டி தினசரி அலறுகிறது. கியூபாவில் தேர்தல் நடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மூலம் ஆட்சி நடக்கிறது. காஸ்ட்ரோ மக்களின் பாசமிக்க தலைவரே தவிர, சர்வாதிகாரி அல்ல என்ற உண்மையை ஏகாதிபத்திய மீடியாக்கள் மறைக்கின்றன. மியாமியில் வாழும் ஒரு பெண்மணியிடம் பிடலுக்குப் பிறகு கியூபா எப்படி இருக்கும் என்று கேட்ட பொழுது, கியூபாவில் சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி இவைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. இவர்கள் அங்கே போய் ஏகாதிபத்தியத்தை திணித்தால், அதனால் ரத்தக்களறி ஏற்படும் என்று கூறியுள்ளார்.
(பிளாக் அமெரிக்கா.வெப்.காம்)
இந்தப் பின்னணியில் பிடல் காஸ்ட்ரோவின் பேட்டி உள்ளதை உள்ளபடி நமக்கு காட்டுகிறது. அதனைப் பார்ப்போம்.
(20.5.2006 ல் வெளிவந்த பேட்டி, அறுவை சிகிச்சை என்பது ஆகஸ்ட் மாதத்தில் இதனை மனதில் கொண்டு பேட்டியின் இப்பகுதியைப் படிக்கவும்.)
கேள்வி: உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உங்கள் சகோதரரான ரால் காஸ்ட்ரோ அடுத்த கியூப ஜனாதிபதி ஆவாரா?
பதில்: எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடனடியாக தேசிய சபை கூடி ராலை தேர்ந்தெடுக்கும். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். ராலுக்கும் வயதாகி வருகிறது, இது இயற்கையாகவே தலைமுறைகளின் பிரச்சனையாகும். கியூபப் புரட்சிக்காக பாடுபட்டவர்கள் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு நல்ல அம்சம். எங்களுக்கு முன்னால் மூத்த கியூப போராளிகளும், மார்க்சிய லெனினிய கட்சியான சோசலிஸ்ட் பாப்புலர் கட்சியின் தலைவர்களும் இருந்தனர். அவர்களுக்குப் பின்னால் புதிய தலைமுறையாக நாங்கள் இருந்தோம். அதற்குப் பின்னால் வந்தவர்கள் எழுத்தறிவு இயக்கம், கொள்ளையை எதிர்த்த போராட்டங்கள், தடைகளை எதிர்த்த போராட்டங்கள், பயங்கரவாதத்தை எதிர்த்த போராட்டங்கள், கிரான் போராட்டம், அக்டோபர் 1962-ல் நிகழ்ந்த ஏவுகணை பிரச்சனை, சர்வதேச சதிகளை எதிர்த்த போராட்டங்கள் என அனைத்து இயக்கங் களிலும் பங்கேற்றனர். தகுதி படைத்தவர்கள் ஏராளம் ஏராளம். பல விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்களின் தலைவர்கள், அறிவுஜீவிகள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்கள் இருக்கின்றனர். கியூப தேசத்தில் திறமை படைத்தவர்களுக்கு பஞ்சமில்லை. இத்துடன் புதிய தலைமுறையின் வாலிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக பணியாளர்களும் இணைந்துள்ளனர்.
கேள்வி:  அப்படியானால், ரால் காஸ்ட் ரோ உங்களைத் தொடர்ந்து அதிபரானால், அது தனி நபர் என்பதைவிட அடுத்த தலைமுறை, அதாவது தற்கால தலைமுறை தலைமைப் பொறுப்பேற்பதாகவே அர்த்தம் என்று சொல்ல வருகிறீர்கள்?
பதில்:  ஆம். தலைமையை ஒரு தலைமுறையிடமிருந்து மற்றோர் தலைமுறையே எடுத்துக் கொள்கிறது. நான் அதில் உறுதியாக இருக்கிறேன், அதை பலமுறை சொல்லியும் இருக்கிறேன். ஆனாலும், புரட்சி நடைமுறைக்கு பலப்பல ஆபத்துகள் இருக்கின்றன என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். தாமாகவே புறநிலை புரியாது புரிந்த தவறுகள்… அப்படிப்பட்ட தவறுகளும் இருந்தன. இந்த தவறுகளையும், குறிப்பிட்ட போக்குகளையும் கண்டறியாமல் விட்டதற்கு நாங்களே பொறுப்பு. இன்று, அந்த தவறுகளில் பல சரி செய்யப்பட்டுள்ளன, ஆனாலும் சில தவறுகளுக்கு எதிரான எங்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நான் நான்காவது தலைமுறை என்றழைக்கும் நபர்கள், முதல் தலைமுறையினரான எங்களைவிட அதிக ஞானம் படைத்தவர்களாக, இரண்டாம் தலைமுறையினரைக் காட்டிலும் மூன்று மடங்கு அறிவுத்திறம் படைத்தவர்களாக, மூன்றாம் தலைமுறையினரை விட இரண்டரை மடங்கு அதிகம் விபரமறிந்தவர்களாக இருக்கிறார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உன்னிப்பாக கவனியுங்கள் – இந்த தேசத்தின் கடற்கரைகளை பார்ப்பதைவிட, கியூபாவின் சமூக முன்னேற்றத்தை காண்பதற்காகவே அதிக மக்கள் வருவார்கள். ஏனெனில், எங்கள் தேசம் பலவற்றை செய்து கொண்டிருக்கிறது. ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஒழிக்க ஐ.நா. சபையின் பொதுச் செயலாளருக்கு தேவைப்பட்ட மனித வளத்தை சின்னஞ்சிறு கியூபாவால் கொடுக்க முடிந்தது. இன்று கியூப மருத்துவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்துமே, ஆயிரம் மருத்துவர்களைக்கூட எங்கள் மருத்து வர்கள் சென்ற இடங்களுக்கு அனுப்ப முடியவில்லை. 4000 மருத்துவர்களை அனுப்புவதாக ஐ.நா சபையிடம் உறுதி கொடுத்தோம். இதுவரை 3000க்கும் மேற்பட்டவர்களை அனுப்பியிருக்கிறோம். இது எங்களுக்கு ஓரளவு மன நிறைவைத் தருகிறது. 40 ஆண்டுகளாக தடைகளையும், பத்தாண்டுகள் நீடித்த சிறப்பு காலத்தையும் (Special Period) அனுபவித்த ஒரு நாடு இதைச் செய்ய முடிந்திருக்கிறது. மனித மூலதனத்தை வெறும் தற்பெருமையினாலோ அல்லது சமூகத்தோடு ஒட்டாத தனி மனிதப் போக்கினை ஊக்குவிப்பதாலோ உருவாக்க முடியாது.
கேள்வி: எந்த சிக்கலும் இல்லாமல் உங்கள் இடம் நிரப்பப்படும் என்று நம்புகிறீர்களா?
பதில்: நிச்சயமாக எந்த சிக்கலும் இல்லாமல் அது நடைபெறும். அதற்குப் பிறகும் கூட நிச்சயமாக எந்த பிரச்சனையும் வராது. ஏனென்றால் புரட்சி என்பது எந்த ஒரு பெரிய தலைவரையோ அல்லது தனிமனித வழிபாட்டையோ அடிப்படையாக கொண்டு நடைபெறுவதல்ல. புரட்சி என்பது கொள்கைகளின் அடிப்படையில் நடைபெறும். நாங்கள் எந்த கருத்துகளை பாதுகாக்க போராடுகிறோமோ, அது அனைத்து மக்களின் கருத்துகளாக மாறியுள்ளது.
கேள்வி: கியூப புரட்சியின் எதிர்காலம் பற்றி நீங்கள் அதிகம் கவலைப் பட்டதில்லை. ஆனால், சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா மற்றும் அல்பேனிய பின்னடைவுகள், வடகொரியாவின் அவல நிலை, கம்போடியாவின் தலைவிரித்தாடும் பயங்கரவாதம், புரட்சி வேறுவடிவத்தில் தோற்றமளிக்கும் மக்கள் சீனம் – இவற்றையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு கவலையாக இல்லையா?
பதில்: உலகின் முதல் சோசலிச நாடு, சோவியத் யூனியன், தன்னைத் தானே சரிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அது தன்னைத்தானே அழித்துக்கொண்டது என்பது நிச்சயம் கசப்பான அனுபவம்தான். உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாக இருந்த தேசம், மற்றொரு வல்லரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தேசம், பாசிசத்தை வீழ்த்திய தேசம் – சிதிலமடைந்தது என்ற இந்த நம்புவதற்கரிய நிகழ்ச்சிப்போக்குகளை நாங்கள் கவனிக்காமலோ அல்லது அது குறித்து கவலைப்படாமலோ இருக்கிறோம் என்று ஒரு விநாடிகூட நினைத்துவிடாதீர்கள். முதலாளித்துவ வழிகளில் சோசலிசத்தை நிர்மாணிக்க முடியும் என்று சிலர் நினைத்தார்கள். இது ஆகப்பெரிய வரலாற்றுத் தவறாகும். இதை தத்துவ ரீதியில் நான் விளக்க விரும்பவில்லை. ஆனால், தாங்கள் மிகப்பெரிய தத்துவ நிபுணர்கள், மார்க்ஸ், ஏங்கல்ஸ் மற்றும் லெனினின் புத்தகங்களை கரைத்துக்குடித்து தங்கள் உடம்பு முழுக்க நிரப்பிக் கொண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலர் செய்த தவறுகளை என்னால் பட்டியலிட முடியும். ஆரம்பகாலங்களிலும் புரட்சியின் பல கட்டங்களிலும், சோசலிசத்தை நிர்மாணிப்பது எப்படி என்பதை அறிந்த ஒருவர் இருக்கிறார் என்று நம்பியதே நாம் செய்த தவறு என பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். இன்றோ, சோசலிசத்தை கட்டமைப்பது எப்படி என்பது குறித்து தெளிவான கருத்து நமக்கு இருக்கிறது. ஆனால், உருவாக்கிய சோசலிச சமூக அமைப்பை தக்கவைத்துக் கொள்வது குறித்தும், சோசலிசமே தன்னை தற்காத்துக் கொள்வது குறித்தும் மேலும் பல தெளிவான கருத்துகள் நமக்கு தேவைப்படுகிறது. சீனா என்பது தனியான விஷயம். இன்று உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாக உருவாகி வரும் தேசம், வரலாற்றால் அழிக்க முடியாத ஒரு மகத்தான சக்தி, சில அடிப்படையான கோட்பாடுகளை பின்பற்றும் தேசம், ஒற்றுமையை முன்வைக்கின்ற, தன் வல்லமையை பலவீனப்படுத்திக் கொள்ளாத தேசமாக சீனா இன்று விளங்குகிறது. நான், கூர்ந்து கவனித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சோவியத் யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் பின்னடைவை சந்தித்தாலும், ஒரு சின்னஞ்சிறு தேசம், தடைகளால் சூழப்பட்ட தேசம், சிறப்பு காலம் எனும் வரையறையை இன்னும் முடித்திராத தேசம் – சோசலிச கியூபாவால் ஒரு சென்ட் பணம் கூடப்பெறாமல், மூன்றாம் உலக நாடுகளில் பயிற்சி பெற்ற நிபுணர்களோடு பங்கு பெற்று, உதவியளித்து சோசலிச கட்டுமானத்தை உருவாக்கும் பணியினைச் செய்ய முடிகிறது; அனைத்துத் துறைகளிலும் நிறைவான முன்னேற்றத்தை உறுதி செய்கிறது.
கேள்வி: ஆனால் பலர் இந்த கேள்வியை எழுப்புகிறார்கள். கியூபாவின் சோசலிச புரட்சி தோற்கக்கூடுமா?
பதில் : புரட்சிகள் தோல்வியிலேயே முடியும் என்பது விதியா என்ன? அல்லது நபர்கள் புரட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறார்களா என்று கேட்கிறேன்! மனிதர்களால், சமூகத்தால் புரட்சிகளை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற முடியுமா? நான் என்னையே இந்த கேள்வியை பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் – அமெரிக்கர்களால் இந்த புரட்சிகர நடை முறையினை அழித்துவிட முடியாது. ஏனெனில் எம் தேச மக்கள் ஆயுதம் ஏந்தத் தெரிந்தவர்கள். எம் தவறுகளையும் தாண்டி, உயர்ந்த நிலையிலான கலாச்சாரத்தையும், அறிவுத் திறனையும், மனச் சான்றினையும் பெற்றிருப்பவர்கள். அது இந்த தேசத்தை மறுபடியும் அமெரிக்காவின் காலனியாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்காது. ஆனால், இந்த தேசம் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முடியும்; புரட்சியும் அதனையே வீழ்த்திக் கொள்ள முடியும். நம்மால்தான் அதனை அழிக்க முடியும். நாம் நமது தவறுகளை திருத்திக் கொள்ளவில்லையென்றால், திருட்டு உள்ளிட்ட பல தீய பழக்கங்களை நாம் விட்டொழிக்கவில்லையென்றால் புரட்சியின் வீழ்ச்சிக்கு நாமே பொறுப்பாவோம். இந்த காரணத்திற்காகத்தான் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முழுமையான சமூக மாற்றத்தை நோக்கி நாங்கள் முன்னேறி வருகிறோம். மாற்றத்திற்கான அந்த வழிமுறைகளில் நாங்கள் இறங்க வேண்டியுள்ளது. அசமத்துவம், அநீதி உள்ளிட்ட பல சிக்கலான காலகட்டங்களை நாங்கள் அனுபவித்து விட்டோம். எந்த ஒரு திசை திருப்புதலும் இல்லாமல் நாங்கள் இதை மாற்றியாக வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment