Monday 15 August 2016

வேர்களைத் தேடிய பயணம்!


சமத்துவம்தான் பெரியாரின் அடிப்படை நோக்கம் என்றால், அந்த வேலையைப் பார்க்காமல், ஏன் கடவுள் மறுப்புப் பரப்புரையில் அவர் இறங்கினார்? ஏன் மதங்களுக்கு எதிராக - குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக - காலம் முழுதும் எழுதியும், பேசியும் வந்தார்? இப்படித்தான் பலரும் கேட்கின்றனர்.
சாதி, மதம், கடவுள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்ததுதான் அதற்கான காரணம். அதிலும் இந்து மதம் என்பது வருண-சாதி பிரிவுகளின் உற்பத்தித் தளமாக இருக்கின்றது. அதனால்தான் இந்து மதம் வேர் கொண்டுள்ள இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த நாடுகளிலும் மட்டுமே ஜாதி உள்ளது.
வேறு மதங்களிலும் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கும் ஜாதிக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. கத்தோலிக்கம், புராடஸ்டண்ட் ஆகிய பிரிவுகளும், சன்னி, ஷியா போன்ற பிரிவுகளும் இந்து மதத்தில் உள்ள சைவம், வைணவம் போன்றவை. பிறப்பால் தீர்மானிக்கப் படுபவை அல்ல. ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையிலானது.
'ஜா' என்றாலே பிறப்பு என்றுதான் பொருள். அதனால்தான், பத்மஜா (தாமரையில் பிறந்தவள்), வனஜா (வனத்தில் பிறந்தவள்) என்றெல்லாம் பெயர்கள் வைக்கப்படுகின்றன. சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாற முடியும். சமயத்திலிருந்து அப்பர் சைவத்திற்கு மாறவில்லையா? ஆனால் அருந்ததியர் ஒருவர் முதலியாராகவோ, கோனாராகவோ மாற முடியுமா? அவர் மட்டுமின்றி, அவருடைய பரம்பரையில் கூட எவர் ஒருவரும் தன் ஜாதியை மாற்றிக் கொள்ள முடியாது.
அவ்வாறு மாற்றிக் கொள்ளவே முடியாத ஒரு ஏற்றத் தாழ்விற்கு வழி வகுக்கும் வருண சாதிப் பிரிவுகளுக்கான வேர்கள் இந்துமத வேதத்திலேயே காணக் கிடக்கின்றன.
இந்து மதத்தின் அடிப்படை ஸ்ருதியும், ஸ்மிருதியும்தான். சுருதி என்றால் தெய்வத்தால் அருளப்பட்டது, மனிதர்களால் கேட்கப் பட்டது என்று ஆகும். ஸ்மிருதி என்பவை நினைவில் கொள்ளத்தக்கவை அல்லது வழி வழியாக வந்தவை எனப் பொருள்படும். அவை மனிதர்களால் இயற்றப்பட்டவை.
வேதங்களும், உபநிடதங்களும் கடவுள் அருள் பெற்ற ரிஷிகளால் அருளப்பெற்ற ஸ்ருதிகள் என நம்பப்படுகின்றன. அவற்றுள் ரிக் வேதமே ஆதி வேதம். அந்த வேதத்தின் பத்தாவது இயலான புருஷ சூக்தம்தான் வருண வேறுபாட்டை 'எடுத்தருள்கிறது.' அந்த வருண அடிப்படையில், பிற்காலத்தில் ஒவ்வொரு வருணத்திற்குமான "தருமம்" கூறப்படுகிறது. இந்து மதத்தைப் பொறுத்தமட்டில் 'தருமம்' என்றால் அறம், நீதி என்றெல்லாம் பொருள் இல்லை. அவரவர் வருணத்திற்கு ஏற்ப விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதே அறம்.
சூத்திரனுக்கு விதிக்கப்பட்ட தருமம், "பலனை எதிர்பார்க்காமல் மற்ற வருணத்தாருக்கெல்லாம் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்பதே ஆகும். ஆக, , ஏற்றத் தாழ்வைப் பரம்பரை பரம்பரைக்கும் உறுதி செய்கிறது இந்து மதம். . பிறகு அதனை விட்டுவிட்டு ஜாதியை எப்படி எதிர்ப்பது. ஜாதியை எதிர்க்காமல் சமத்துவத்தை எப்படிப் பெறுவது? சமதத்துவம் இல்லாத இடத்தில் சுயமரியாதை எங்கிருந்து வரும்?
அதனால்தான் பெரியார் சொன்னார், "நான் ஜாதி என்கிற நச்சு மரத்தைப் போட்டுப் பொசுக்கத்தான் புறப்பட்டேன். உன் மதம் புனிதமானது என்றால், ஜாதியை விட்டு மதத்தைப் பிரித்து எடுத்துக் கொண்டு போ. முடியாது, இரண்டும் சேர்ந்தேதான் இருக்கும் என்றால் நான் அதனையும் சேர்த்தே ஒழிக்க வேண்டும். அப்படிச் செய்கிறபோது உன் கடவுள் உனக்குப் புனிதம் என்றால், இவைகளை விட்டுத் தனியாக எடுத்துக் கொண்டு போய்விடு. இல்லையில்லை, ஜாதி, மதம், வேதம், கடவுள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து கிடக்கிறதென்றால், கடவுளையும் போட்டுப் பொசுக்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை".
பெரியாரின் கடவுள் மறுப்பு இதுதான்! இந்த நோக்கில்தான் 'கடவுளை மற, மனிதனை நினை' என்கிறது பெரியாரியம்
-
சுப வீரபாண்டியன் அவர்களின் சுயமரியாதை தொடரில் ஆறாம் பகுதி

No comments:

Post a Comment